Published : 15 Feb 2021 11:24 AM
Last Updated : 15 Feb 2021 11:24 AM

சட்டப்பேரவைத் தேர்தல்; பிப்.24 முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு 

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் பிப்.24 முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனியாகக் களம் காண உள்ளன.

தேர்தல் நடப்பதை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் திமுக, அதிமுக கட்சிகள் தனது தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இருப்பை உறுதி செய்துள்ளது. பாமக, தேமுதிக நிலை இன்னும் முடிவாகவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எதுவும் முடிவடையாத நிலையில், ஜெயலலிதா பாணியில் அதிமுக விருப்ப மனு பெறுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கட்சியினர் தலைமை அலுவலகத்தில் வருகின்ற பிப்ரவரி 24 (புதன்கிழமை) முதல் மார்ச் 5 (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விருப்பமான விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு விருப்ப மனு கட்டணத் தொகை ரூ.15,000, புதுச்சேரி விருப்ப மனு கட்டணத் தொகை ரூ.5,000, கேரளாவிற்கு கட்டணத் தொகை ரூ.2000”.

இவ்வாறு ஓபிஎஸ்- இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்காத நிலையில் அதிமுகவின் இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். எந்தெந்தத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்பது தெரியாததால் கட்சியினரிடையேயும் குழப்பம் ஏற்படும்.

விருப்ப மனு பெற்று விண்ணப்பித்தவர்கள் அத்தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், அவர்கள் கூட்டணிக் கட்சி வெற்றிக்குப் பாடுபடவேண்டும் எனத் தலைமை அறிவிப்பது இதற்கு முன்னரும் உள்ள வழக்கம்தான்.

சில நேரம் வேட்புமனுத் தாக்கல் நேரம் வரை கூட்டணி முடிவடையாத நிலையும் ஏற்பட்டதுண்டு. அப்போது தேர்வு செய்யப்பட்ட கட்சியினர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிடுவார்கள். பின்னர் கூட்டணிக் கட்சிக்காக ஒதுக்கப்படும்போது வாபஸ் பெறும் நிகழ்வும் நடந்துள்ளது.

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், திமுகவில் எப்போது அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x