Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

காவல் துறை அனுமதி தாமதம் ஆவதால் மக்கள் நீதி மய்யம் மாநாடு மார்ச் 7-க்கு தள்ளிவைப்பு: கட்சித் தலைவர் கமல்ஹாசன் தகவல்

காவல் துறை அனுமதி கிடைக்காததால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் மாநாடு மார்ச் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு கமல் எழுதியுள்ள கடிதம்:

‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் நமது கட்சியின் மாநில மாநாட்டை வரும் 21-ம் தேதி நடத்ததிட்டமிட்டிருந்தோம். அதற்கு அனுமதி கேட்டு கடந்த 6-ம் தேதியேகாவல் துறையை அணுகினோம். ஆனால், இந்த அறிவிப்பை எழுதும்நிமிடம் வரை அனுமதி கிடைக்கவில்லை. கரோனா காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் நிகழ்வை மிகுந்த கவனத்துடன் ஒருங்கிணைக்க போதிய அவகாசம் வேண்டும். காவல் துறை அனுமதி தாமதிக்கப்படுவதால், வேறு வழியின்றி மாநாட்டை மார்ச் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

மாநாடுதான் ஒத்திவைக்கப்படுகிறதே தவிர, நமது சந்திப்புகள் தொடர்கிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மேற்குதாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி உள்அரங்கத்தில் பிப்ரவரி 21-ம் தேதி நடக்கிறது.

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற மக்கள் நீதி மய்யத்தின் மாபெரும் தேர்தல் மாநாடு சென்னை வண்டலூர் - ஒரகடம்சாலையில் உள்ள மண்ணிவாக்கத்தில் மார்ச் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று ‘பெண் சக்தி’ எனும் தலைப்பில் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றுகூடி பெண்மையை போற்றும் நிகழ்வு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் நடக்க உள்ளது. ஒன்றுகூடுவோம், வென்று கூடுவோம். நாளை நமதே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x