

மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.500 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால்மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவாடு பிரியர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது மாசி வகை கருவாடு. சூரை மீன்களில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தி, தண்ணீரில் வேகவைத்து, பின்னர்10 நாட்கள் நன்கு உலர வைப்பதன் மூலம் மாசிக் கருவாடு கிடைக்கிறது.
வெளிநாடுகளில் வரவேற்பு
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாசிக் கருவாடு அதிகளவில்தயாரிக்கப்படுகிறது. இந்த கருவாடுக்கு இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. மொத்த சூரை மீன் வரத்தில் 17 சதவீதம் மாசிக் கருவாடு தயாரிக்க பயன்படுகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு மாசிக் கருவாடு இறக்குமதிக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி திடீரென தடை விதித்தது. இதனால் மாசிக் கருவாடு தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த மாசிக் கருவாடு தயாரிப்பாளர் பி.அந்தோணி செல்வசேகர் கூறியதாவது:
உற்பத்தி குறைவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் இலங்கைக்கு தினமும் 20 டன் மாசிக் கருவாடு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
கடந்த 4 மாதங்களாக ஏற்றுமதிஇல்லாததால், குடோன்களில் மாசிக் கருவாடு பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது. நாடு முழுவதும் ரூ.500 கோடி அளவுக்கு மாசிக் கருவாடு தேக்கம் அடைந் துள்ளது.
ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் மாசிக் கருவாடு உற்பத்தியும் கடந்த 2 மாதங்களாக குறைந்துள்ளது. இதனால் சூரை மீன் விலையும் சரிந்துள்ளது. தருவைகுளத்தில் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட சூரை மீன், தற்போதுரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாசிக் கருவாடு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மாசிக் கருவாடு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க, மத்திய அரசுமூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.