

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளத்தில் மாவீரன் மஞ்சள் படையின் கொடியை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரான காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று புறப்பட்டார். அப்போது, சட்டம், ஒழுங்கு பாதிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடி ஏற்ற வந்த கனலரசன் உட்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனிடையே, கனலரசன் தரப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நகரச் செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்டோர் ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று காரணமாக தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி ஒன்று கூடியதாக திருமாவளவன் உட்பட 16 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.