

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி தெருவிளக்குகள் பழுதாகி விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கோவை மாநகரில் 6,300-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பிரதான சாலைகள், உட்புறச் சாலைகளில் ஏறத்தாழ 75,034 தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியத்துக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மாநகராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்துகிறது.
மாநகராட்சிப் பகுதியில் மண்டலம் வாரியாக, தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் இந்த தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், 60 வார்டுகளில் 58 ஆயிரம் புதிய எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மாநகரின் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் சாலை, சரவணம்பட்டி, சாய்பாபகாலனி, குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. சில இடங்களில் காற்றின் வேகத்துக்கு வயர்கள் துண்டாகிவிடுகின்றன. சில இடங்களில் பல்புகள் பழுதடைந்துள்ளன. விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், நகை பறிப்பு, வழிப்பறி போன்றவை நேரிடவும் வாய்ப்புள்ளது. எனவே, பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "மாநகரின் ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அதிக ஒளி தரும். தெரு விளக்குகள் பழுதடைந்தால், அவை உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன" என்றனர்.