

வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில், நீர் இன்னும் வடியாததால் அப் பகுதியில் வசிப்போர் வேறு வழியின்றி குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக, கீழ்க்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, மடிப்பாக்கம் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள ஏரிகளில் இருந்து வெளி யேறும் நீர், மடிப்பாக்கம், பெரி யார் சாலை, மகாலட்சுமி நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், ராம்நகர், சீனிவாச நகர், பகுதி களை சூழ்ந்துள்ளது.
மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ள லட்சுமி நகர், குபேரன் நகர், வேளச்சேரி ராம்நகர் பகுதிகளில் படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மின்சாரம், குடிநீர் இல்லாதது, கொசுத்தொல்லை உள்ளிட்ட காரணங்களால் வேறு வழியின்றி மடிப்பாக்கம் குபேரன் நகர், லட்சுமி நகரில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளி யேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
வேளச்சேரி மெயின்ரோட்டில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. வாகனங்கள் மெது வாய் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
மேடவாக்கம் கூட்டு ரோடை அடுத்துள்ள ரெங்கநாதபுரம் ஏரி மழை நீரால் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீரால் ரெங்கநாதபுரம் பகுதி குடிசை வீடுகள் சூழப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள அரசுப் பள்ளியிலும், கோயிலிலும் தங்கியுள்ளனர்.