

காஞ்சிபுரம் நகரில் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அனந்த சரஸ் புஷ்கரணி தீர்த்த குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் ஆதி அத்திவரதர் சயனம் கொண்டுள்ளார். மேலும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அத்திவரதர் குளத்தில் வெளியே எடுக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனால், காஞ்சிபுரம் நகரம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும், பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்திவரதர் வைபவத்துக்காக முதற்கட்டமாக ரூ.29 கோடி, பின்னர் ரூ.15 கோடி என மொத்தம் ரூ.44 கோடி செலவிடப்பட்டதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினங்கள், சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் கோயில் நிர்வாகத்துக்கு கிடைத்த வருவாய் மற்றும் எத்தனை பக்தர்கள் தரிசித்தனர் போன்றவை குறித்து, சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில், கோயில் நிர்வாகம் பல விவரங்களை வழங்கியுள்ளது. இதில், அத்திவரதர் வைபவத்துக்கு அரசு சார்பில் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், ரூ.50 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம் ரூ.5.91 லட்சம், ரூ.300 டிக்கெட் மூலம் ரூ.1.45 கோடி மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2.25 கோடி என மொத்தம் ரூ.3 கோடியே 76 லட்சத்து 83 ஆயிரத்து 800 வருவாயாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், உண்டியல் மூலம் ரூ.10.60 கோடி ரொக்கம் மற்றும் 165.20 கிராம் தங்கம், 5,333.20 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட வைபவத்தின் மூலம் 48 நாட்களில் அத்திவரதரை 1.07 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் 3.50 லட்சம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவத்துக்கு அரசு சார்பில் ரூ.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டதாக அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோயில் நிர்வாகம் வழங்கியுள்ள தகவலில் அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் காசிமாயன் கூறியதாவது: அத்திவரதர் வைபவத்தின் பல்வேறு விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தேன். இதில், ஓர் ஆண்டுக்குப் பிறகு தாமதமாக பதில் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
வைபவத்தின் கடைசி 2 நாட்கள் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், 47-வது நாள் 3.50 லட்சம் விஐபிக்கள் சுவாமி தரிசனம் செய்ததாக முரண்பாடான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவத்தின் மூலம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் முதல் கிராம மக்கள் வரை பலர் தரிசித்த நிலையில், நிர்வாக செலவினங்கள் வெளிப்படைத் தன்மையற்றதாக உள்ளது. இதன்மூலம், அரசு நிதி மற்றும் அனைத்து வருவாய்களிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அறநிலையத் துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.