

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் எதிரே ஏர் கலப்பை போராட்டம் நடைபெற்றது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்ஜய் தத், சிரிவெல்ல பிரசாத், சி.டி.மெய்யப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, கரூர், திருவள்ளூர் எம்பிக்களான ஜோதிமணி, ஜெயக்குமார், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்று, கண்டன உரையாற்றினர்.
பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி தெரிவித்ததாவது:
பிரதமர் மோடி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். ஆனால், அவர் காணொலி காட்சி மூலம்தான் அதை செய்கிறார். பொதுமக்களை அவர் எங்குமே சந்திக்கவில்லை. 15 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி வந்தார். அவர், பாதுகாப்பு வளையங்களை எல்லாம் தாண்டி மக்களிடையே சென்று பேசினார். மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களை பேசவிட்டு கேட்டார். ஆறுதல் சொன்னார். அதுதான் ஒரு தலைமைக்கு இலக்கணம்.
தமிழகத்துக்கு வந்தால் மோடி அச்சப்படுகிறார் என்று எனக்கு தோன்றுகிறது. தமிழக மக்களை பார்த்து மோடி அஞ்சுகிறார். அதேசமயம் மோடியை பார்த்து முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அஞ்சுகிறார்கள். அதுதான் தமிழகத்தில் இருக்கக் கூடிய நகை முரண்.
சென்னையில் பிரதமர் மோடி அவ்வையார் பாடலை மேற்கொள் காட்டி பேசிய பேச்சு, எதிரும் புதிருமாக உள்ளது. அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள விவசாயிகள், ’வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை இடம்பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இன்று மிகப்பெரிய பலத்துடன் உள்ள இந்த அரசு நினைத்தால் 12 மணி நேரத்தில் அதை சட்டமாக்கிவிட முடியும். சட்டமாக்கி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். அதைவிடுத்து எதற்காக அவ்வையாரை எல்லாம் இழுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.