

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகம் மின்மிகை மாநில மாக மாறியது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந் திரம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி பகுதிகளில் தொழி லாளர் நல வாரியம் சார்பில் பதிவு செய்யப்பட்ட 450 தொழி லாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி நகரச் செயலாளர் சதாசிவம், அவைத் தலைவர் சுபான் ஆகியோர் தலைமை வகித்தனர். தொழிலாளர்நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும்போது, "திமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயன்பெறக்கூடிய எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
திமுக ஆட்சியில் கடும் மின்பற்றாக்குறை நிலவியது. மின் வெட்டால் தமிழகம் இருண்டு காணப்பட்டது. சீரான மின்சாரம் இல்லாததால் தொழில் வளர்ச்சி முடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகே மின்பற்றாக்குறை சரி செய்யப்பட்டு, தற்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதுடன் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடைமுறைப்படுத்திய எந்த திட்டங்களும் மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் தற் போது நடைமுறையில் இல்லை. தற்போதுள்ள திட்டங்கள் அனைத் தும் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள். மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்களை அதிமுக அரசால் மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றியச்செயலாளர் செந்தில் குமார், மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா கந்தன், வர்த்தக அணிச் செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.