

தேர்தல் நேரத்தில் தமிழக அரசு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது மரபு மீறிய செயல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் இன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
''ஒரு அரசு 5 முறைதான் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் பழனிசாமி அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாமல், முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாக செய்தி வருகிறது. முதல்வர் மரபை மீறக் கூடாது. அப்படி மீறினால் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்போம்.
நான்கு ஆண்டுகள் 9 மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு, கடைசி 3 மாதங்களில் பல அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் வேடிக்கை மத்தாப்புதான். மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தேர்தலுக்காக தமிழகம், கேரளாவிற்கு பல ஆயிரம் கோடியில் திட்டங்களை அறிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளாக சரிந்து அதலபாதாளத்தில் உள்ளது. இவர்களால் இந்தியப் பொருளாதாரத்தை தலைநிமிரச் செய்ய முடியாது. அதற்கான உத்தியும் கிடையாது, புத்தியும் கிடையாது.
பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் ஒத்துப்போகாதநிலையில், இடையில் டிடிவி தினகரன் நுழைகிறார். இதனால் அதிமுகவில் குழப்பம் உள்ளது. தேர்தலில் ஜெயலலிதாவைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இரண்டு தரப்பினர் வர உள்ளனர். அவ்வாறு வந்தால் நமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.