Published : 14 Feb 2021 04:35 PM
Last Updated : 14 Feb 2021 04:35 PM

கோவையிலும் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளில் ஒரு பகுதி சிறப்பாக முடிவடைந்து செயல்படும் நிலையில் அடுத்தகட்டமாக கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் மோடி சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''ஜனவரி 18 அன்று பிரதமரை நான் நேரில் சந்தித்தபோது, தமிழ்நாட்டில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், தமிழ்நாட்டுக்கு வருகை தருமாறு நான் வேண்டுகோள் விடுத்தேன். நான் விடுத்த அன்பு வேண்டுகோளினை ஏற்று, தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள பிரதமரைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், எனது சார்பிலும், வருக வருக என வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.

பிரதமரின் வழிகாட்டுதல்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதனைத் தொடர்ந்து, இந்தத் தொற்றினை முற்றிலும் வேரறுக்க, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை, மக்களுக்கு போடும் திட்டம் தற்போது சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மேலும், நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. இதனால் நமது நாட்டின் பெருமையை உலக அளவில் வெகுவாக உயர்த்துவதற்கு இதற்கான முயற்சி எடுத்து வெற்றி கண்ட பிரதமரை வெகுவாகப் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொய்வடைந்த நம் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவிரைவில் தனது துரித நடவடிக்கைகளால் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்த பிரதமரின் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

சென்னை மாநகரத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள். பெருநகர சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தில் பல்வேறு வழித்தடப் பகுதிகளில் பயணிகள் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாக இன்று, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - கட்டம்-1ன் கீழ், 18,380 கோடி ரூபாய் செலவில் 45.1 கிலோ மீட்டர் நீளத்திலான வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடமும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான வழித்தடமும் அமைத்து முடிக்கப்பட்டு, 10.2.2019 முதல் பயணிகள் சேவை முழுமையாக நடைபெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - கட்டம்- 1ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ், 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 9.051 கிலோ மீட்டர் நீளத்தில் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான திட்டத்திற்கு ஜெயலலிதா 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார். தற்போது இப்பணிகள் முடிவுற்று, பிரதமரின் கரங்களால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பு வாய்ந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை இங்கு செயல்படுத்துவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கும், நிதி அமைச்சகத்திற்கும், இத்திட்டத்திற்கு நிதி பங்களிப்பு வழங்கிய ஜப்பான் பன்னாட்டு முகமைக்கும் (JICA) என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது விரிவடைந்து வரும் சென்னை பெருநகரின் போக்குவரத்து தேவையினைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - இரண்டாம் கட்டத்தினை 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த 25.5.2018 அன்று நடைபெற்ற மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் நான் அறிவித்தபடி, விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கோயம்புத்தூர் மாநகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். அதில் வெற்றி கண்டு பொதுமக்களின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது தமிழக அரசு அவரது வழியிலேயே, மழைநீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நீலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்திப் பாதுகாக்க, குடிமராமத்து திட்டத்தினை விவசாயிகளின் பங்களிப்புடன் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன்பே, கரிகால் பெருவளத்தானால் அமைக்கப்பட்ட கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தமிழர்களின் பொறியியல் திறமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

4,200 கன அடி நீர் செல்லும் கல்லணை கால்வாயினை நவீன வசதிகளுடன் 2,640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1,714 மதகுகள், 26 கீழ்குமிழி பாலங்கள், 108 கிணறு நீர் இழுகுழாய், 76 சுரங்கங்கள், 28 நீர் ஒழுங்கிகள், 20 பாலங்கள் மற்றும் 403 ஏரிகள் புனரமைக்கப்படும். மேலும், 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் SCADA தொழில்நுட்ப மேலாண்மை முறை செயல்படுத்தப்படும். இதன் பயனாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 67,500 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும்.

இந்த உன்னதமான திட்டத்திற்கு பிரதமர் தன் கரங்களால் அடிக்கல் நாட்ட உள்ளார். தற்பொழுது பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட உள்ள நீர் மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பொழுது, மேலும் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்பது உறுதி.

நாட்டிற்கே முன் உதாரணமாக, பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை எனது தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தினால், நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருது, தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கே பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. பிரதமர் இன்று முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

* இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), சென்னையில் 1959 முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, அரசு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 163 ஏக்கர் நிலத்தை ஐஐடி-க்கு 2017இல் இலவசமாக வழங்கியது. இங்கு 1,000 கோடி ரூபாயில் உலகத் தர ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைப்பதற்காக ‘டிஸ்கவரி வளாகத்திற்கு’ அடிக்கல் நாட்டவுள்ளதற்காகவும்,

* தெற்கு ரயில்வே, துறைமுகங்களை இணைப்பதற்காக சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 22.1 கி.மீ. நான்காவது ரயில் பாதை மற்றும் விழுப்புரம்-கடலூர்-திருவாரூர் ரயில் தடத்தை மின் ரயில் பாதையை அர்ப்பணித்து, 716 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதற்காகவும்,

* சென்னை, ஆவடியில் உள்ள DRDO நிறுவன CVRDE-ல் வடிவமைக்கப்பட்ட ராணுவ டாங்க் அர்ஜூன் மார்க்-1, ராணுவp பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதற்காகவும், பிரதமருக்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x