

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 கைகள், 4 கால்கள் மற்றும் மற்றொரு உடற்பகுதியுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி கிராமத் தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முனு சாமி(28). இவருக்கும் மத்தூர் அருகே உள்ள பெருகோபனப் பள்ளியைச் சேர்ந்த லட்சுமி(26) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3-வது முறையாக கர்ப்பமான லட்சுமி, பிரசவத்துக்காக தனது தாய் வீடான பெருகோபனப்பள்ளிக்குச் சென்றார். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெருகோபனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 3.400 கிலோகிராம் எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு 4 கைகள், 4 கால் கள் மற்றும் மற்றொரு வயிற்றுப் பகுதி ஒட்டியவாறு இருந்தது. உடனடியாக தாய் மற்றும் குழந் தையை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு செவிலியர்கள் அனுப்பி வைத்தனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மரபணுக்கள் குறைபாடு
இதுதொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்குமார் கூறும்போது, இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறக்கும்போது, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்படும். தற்போது பிறந்துள்ள குழந்தையின் தாய் கருத்தரித்தபோது 2 கருக்கள் வளர்ந்துள்ளன.
இதில் ஒன்று மட்டும் நன்கு வளர்ச்சியடைந்தும், மற்றொரு கருவில் தலை, கழுத்து பகுதி வளர்ச்சி பெறாமல் கை, கால்கள், உடற்பகுதி மட்டும் வளர்ச்சியடைந்த குழந்தையின் உடலில் ஒட்டியுள்ளது. மரபணுக்கள் குறைபாடுகள் காரணமாக இதுபோன்று ஏற்பட வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தையுடன் ஒட்டியுள்ள பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.