தேர்தலில் சசிகலா போட்டியிட சட்டரீதியாக முயற்சி செய்கிறோம்: டிடிவி தினகரன் தகவல்

ஒரத்தநாட்டில் திருமண விழாவில் பேசிய டிடிவி தினகரன். 
ஒரத்தநாட்டில் திருமண விழாவில் பேசிய டிடிவி தினகரன். 
Updated on
1 min read

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று திருமண விழாவில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை புரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதிமுகவினர் பேசும் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அம்மாவின் தொண்டர்கள் இருப்பதுதான் அமமுகவில்தான். இந்த இயக்கம் மட்டும்தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை.

என் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது. எங்களது இலக்கு என்பது அம்மாவுடைய ஆட்சியைக் கொண்டு வந்து மக்களுக்குச் சேவை செய்வதுதான்.

நம்ம ஊரில் ஊற்றிக் கொடுப்பது என்ன குலத் தொழிலா? யாரோ உளறுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கொள்ளையர்கள் அடுத்தவர்களைக் கொள்ளையர்கள் என்றுதான் கூறுவார்கள். ஊற்றிக் கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊற்றிக் கொடுப்பவர் என்றுதான் சொல்வார்கள். இனிமேல் நான் அடிமையாக இருக்க மாட்டேன் எனக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஏற்கெனவே அடிமையாக இருந்திருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். சேற்றிலே கல்லைப் போட்டு தனக்குத்தானே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலம் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புவர்கள் அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அதிமுக என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தருவார்கள். அமமுகவின் எதிர்காலம் என்பது பிரகாசமாக உள்ளது.

சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகின்றன என்று கேட்கிறார்கள். அது சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in