

உலகின் பழமையான அணைக்கட்டான கல்லணையைப் புதுப்பிப்பதன் மூலம் தமிழகத்தின் பாசன திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கும். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமிக்க வேண்டும். உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இது நமது பிரச்சினை மட்டுமல்ல, உலக அளவிலான பிரச்சினை என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். விழா நடக்கும் நேரு உள் விளையாட்டரங்கம் வரும் வழி எங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.
நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த சோதனைக்குப் பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடி மேடையில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்த முதல்வர் பழனிசாமி கிருஷ்ணர் சிலை ஒன்றைப் பரிசளித்தார். அதன் பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் சால்வை அணித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். பிரதமரை நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
''சென்னையில் இருந்து இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த திட்டங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. புதுமை, உள்நாட்டு உற்பத்தி இவற்றின் அடையாளம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
636 கிலோ மீட்டர் தொலைவு நீளம் கொண்ட கல்லணை கால்வாயைத் தூய்மைபடுத்தி புதுப்பிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழகம் பெரும் பயன்பெறும். தமிழக விவசாயிகளுக்கு இந்த நீர்பாசனத் திட்டத்தால் பெரும் பயன் கிடைக்கும்.
தமிழக விவசாயிகளைப் பாராட்டுகிறேன். உணவு தானியங்கள் உற்பத்தியில் அவர்கள் சாதனை புரிந்துள்ளனர். நீர் ஆதாரங்களை நன்றாகப் பயன்படுத்தியதற்காகவும் தமிழக விவசாயிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்லணை வாழ்நாளின் சாதனையாக உள்ளது. நமது தேசத்தின் சுய பாரத சிந்தனைக்குச் சான்றாக உள்ளது.
ஒளவையார் வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமிக்க வேண்டும். உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இது நமது பிரச்சினை மட்டுமல்ல, உலக அளவிலான பிரச்சினை.
சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான 9.05 கி.மீ. தூர மெட்ரோ பாதை மிக முக்கியமானது.
உலகளாவிய பெரும் தொற்றத்தையும் தாண்டி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. உள்ளூரிலேயே ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இருப்பது சாதனையாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்க நாற்கர இணைப்பில் எண்ணூர் - அத்திபட்டு மார்க்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை துறைமுகம் - காமராஜர் துறைமுகம் இடையே போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டிய தேவை உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விழுப்புரம், தஞ்சாவூர்- திருவாரூர் ரயில் தடத்தை மின்மயாக்கி இருப்பது மிக முக்கியது. இதன் மூலம் உணவு தானியங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். உலகின் மிக தொன்மையான மொழியான தமிழில் மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார். ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்” என்றும் “உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்றும் பாடினார்.
இந்தியாவில் இரண்டு ராணுவத் தளவாடங்களில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. நவீன அர்ஜுன் முக்கிய போர் பீரங்கி வண்டியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பதில் பெருமை கொள்கிறேன். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.