

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியத்தில் கடைசியாக இருந்த ஒரு காங்கிரஸ் கவுன்சிலரும் அதிமுகவில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் 3 கவுன்சிலர்கள் வென்ற நிலையில், ஒருவர் கூட மிஞ்சாததால் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸின் கோட்டையாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரத்தின் சொந்த பகுதியாகவும் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது. தற் போது எம்எல்ஏவாக காங்கிஸைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி உள்ளார்.
இத்தொகுதிக்குட்பட்ட சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 11 வார்டுகளில் அதிமுக 5 இடங்கள், திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் தலா 3 இடங்கள் வென்றன. இதனால் தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக கூட்டணி இருந்தது.
அதிமுகவுக்கு ஆதரவு
இதற்கிடையில் காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திக் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு அளித்தததால் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. துணைத் தலைவர் பதவி கார்த்திக்குக்கு கிடைத்தது. இதனால் காங்கிரஸுக்கு 2 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர்.
திமுகவில் இணைந்த கவுன்சிலர்
இந்நிலையில், கடந்த ஜன.24-ம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த திமுக எம்.பி. கனிமொழி முன்னிலையில் மற்றொரு காங்கிரஸ் கவுன்சிலரான திவ்யாவும் திமுகவில் இணைந்தார்.
கடைசியாக இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் தேவிமீனாளும் சமீபத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். வெற்றிபெற்ற மூன்று பேரும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டதால் சாக்கோட்டை ஒன்றியத்தில் காங்கிரசுக்கு ஒரு கவுன்சிலர் கூட இல் லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும், எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.