

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைப்பகுதியில் மின்கம்பிகளில் அடிக்கடி மரக்கிளைகள் விழுவதால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வனப்பகுதி வழியே நடந்து சென்று சம்பந்தப்பட்ட இடத்தை கண்டறிந்து சரிசெய்வதில் மின் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படுவதால், இம்மலைக்கிராமங்களில் பல வாரங்களாக மின்விநியோகம் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
போடி தாலுகாவுக்கு உட்பட்ட மலைப்பகுதி அகமலை. இந்த ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, மருதையனூர், பெரியமூங்கில், பட்டூர், விக்கிரமாதித்தன்தொழு, அகமலை, கரும்பாறை, குறவன்குழி, அலங்காரம், சொக்கன்அலை, சின்னமூங்கில், கானகமஞ்சி, வாழைமரத்தொழு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
அடர்த்தியான வனங்களும், செங்குத்தான சரிவுகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளதால் போடியில் இருந்து இக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் தொடர்பு நகரமாக பெரியகுளம் இருந்து வருகிறது. மருத்துவம், கல்வி, மளிகை, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கும் பெரியகுளத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 26 கி.மீ தூரத்தில் அகமலை இருந்தாலும் இதில் 19 கி.மீ. சாலை மலைப்பகுதியில்தான் கடக்கிறது. அதிக வளைவுகள் உள்ள குறுகிய சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களில்தான் இப்பகுதிக்குச் செல்ல முடியும். மேலும் மாலை 6 மணிக்கு மேல் இச்சாலையில் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பல்வேறு மலைக் கிராமங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்
றனர். இவர்களின் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பெரியகுளம் துணை மின்நிலையத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மழை, காற்று போன்ற நேரங்களில் மரக்கிளைகள் ஒடிந்து மின்கம்பிகளில் விழுந்து விடுகின்றன. இதனால் மின்விநியோகம் பாதித்து மின்தடை ஏற்படுகிறது. கம்பிகள் துண்டாகி விட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ அவற்றை கண்டறிவதில் மின்வாரிய ஊழியர்களுக்கு சிக்கல் உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்தபடி அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று சம்பந்தப்பட்ட பகுதி பழுதை சரிசெய்ய வேண்டி உள்ளது.
இந்த வனப்பகுதியில் புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. எனவே இதுபோன்ற நேரங்களில் பழுதுநீக்கும் பணிக்காக பழங்குடியினர் உதவியுடன் ஊழியர்கள் மின்கம்ப வழித்தடங்களில் நடந்து செல்கின்றனர். மின்வாரிய ஊழியர் பற்றாக்குறை, சரிசெய்வதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல் போன்ற வற்றால் மின்பழுதை பல நேரங்களில் உடனடியாக சரி செய்ய முடிவதில்லை. இதனால் அகமலையில் மின்பாதிப்பு ஏற்பட்டால் பல நாட்கள், அல்லது வாரக்கணக்கில் மின்தடை நீடிக்கும்நிலை உள்ளது. இங்குள்ள மலைக்கிராம மக்களுக்கு கிடைத்துள்ள உயர்வசதிகளில் மின்சாரமும் ஒன்று. அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வெளியுலகத் தொடர்பு இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில்கூட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசுவதைத் தவிர்க்கவும், மின்சாரம் மரங்களில் பாய்ந்து விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும் மின்கம்பிகளைச் சுற்றிலும் கேபிள் பொருத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அகமலையைச் சேர்ந்த வடமலை முத்து என்பவர் கூறுகையில், சாலைகளில் முற்றிலும் அரிப்பு ஏற்பட்டு சிதிலமடைந்து விட்டது. போக்குவரத்து வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜீப் போன்ற வாகனங்களில் வந்தாலும் பல வளைவுகளிலும்,குறுகலான இடங்களிலும் மிகவும் சிரமப்பட்டே இப்பகுதிக்கு வர முடியும். இதனால் சுகாதாரம், மருத்துவத் துறை அலுவலர்கள் இங்கு சரிவர வருவது கிடையாது. அவசர நேரங்களில் நோயாளிகளை டோலி கட்டித்தான் தூக்கிச் செல்கிறோம். ஜீப்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்குகின்றன. ஒருமுறை செல்ல ரூ.70 கட்டணம் பெறுகின்றனர். இவை அனைத்தையும்விட மின் பிரச்சினைதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. வனப்பகுதியில் எந்த மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய சிரமமாக உள்ளது. எனவே வாரக் கணக்கில் இங்கு மின்தடை ஏற்படுகிறது என்றார்.
ஜவஹர் கூறு கையில், அந்தக் காலத் திலேயே அக மலைக்கு மின்சார வசதி செய்யப்பட் டுள்ளது. மொபைல் சமிக்ஞை பிரச்னை இருந்தாலும் குறிப் பிட்ட இடத்தில் நின்று பேசிக் கொள் கிறோம். இதனால் வெளியுலக விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மலைப்பகுதியில் காற்று, மழை நேரங் களில் மின்கம்பிகள் அறுந்து விடுவதால் அவற்றை கண்டறிந்து சரிசெய்வது சவாலான விஷயமாக உள்ளது. எனவே கேபிள் சுற்றுடன் கூடிய கம்பிகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்றார்.
எளிதில் வெளியாட்கள் இங்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அகமலை மலைக்கிராம மக்களின் பல்வேறு சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. எனவே தடையற்ற மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற வசதிகளை இப்பகுதி மலைக்கிராம மக்களுக்கு ஏற்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.