Published : 14 Feb 2021 10:30 am

Updated : 14 Feb 2021 10:31 am

 

Published : 14 Feb 2021 10:30 AM
Last Updated : 14 Feb 2021 10:31 AM

பூத்து குலுங்கும் மாமரங்கள்; அதிக மகசூல் எதிர்பார்ப்பில் விவசாயிகள்- திரட்சியான காய்கள் உருவாக பராமரிப்பு பணிகள் மும்முரம்

mango-trees

பெரியகுளம் 

பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதி மாந்தோப்புகளில் கடந்த 2 ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. இதனால் இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால் மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், திரட்சியான மாங்காய் உருவாவதற்கும் தேவையான பராமரிப்புப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் மா, பலா, எலுமிச்சை, அவக்கோடா, வாழை, நார்த்தங்காய், காப்பி, இலவம் உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மா விளைச்சல் பெரியகுளத்தின் பிரதான அடையாளமாக இருந்து வருகிறது. மா மரங்கள் பூக்கும் தருணங்களில் இதமான காற்று தேவைப்படும். இதன் மூலம் பூச்சித் தாக்குதல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும் என்பதால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.


குறிப்பாக சோத்துப்பாறை, கோவில் காடு, குழாய்த்தொட்டி, உப்புக்காடு, சின்னாம் பாளையம், சுக்காம்பாறை, கழுதைகட்டி ஆலமரம், கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு, அல்லிநகரம், போடி-சிறைக்காடு, முந்தல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன.

மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன்தரும். 75 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்ட இம்மரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தரும் தன்மை கொண்டது. குறிப்பாக கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும். இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன், இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் மாநில அளவிலான கொள்முதலில் பெரியகுளம் மாங்காய்கள் முன்னணியில் உள்ளன. காசா, கள்ளாமை, அல்போன்சா, செந்தூரம், மல்கோவா, காதர், பங்கனவள்ளி, காலப்பாடி, கிரேப் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விளைந்தாலும் காசா, கள்ளாமை ரகங்களே தேனி மாவட்டத்தில் அதிகம் விளைகின்றன.

மாங்காய்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் கேரள மக்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். மாம்பழங்களை நேரடியாக உண்பதுடன், காய்களை கூட்டு, பச்சடி, குழம்பு என்று பல உணவுகளாக மாற்றி பயன்படுத்துவதில் விருப்பம் உடையவர்கள். இதனால் பெரியகுளம் பகுதியில் விளையும் காசா ரகங்கள் கேரளாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. இங்கு விளையும் கள்ளாமை ரகத்தில் அதிக சாறும், இனிப்பும் உள்ளதால் கிருஷ்ணகிரி மாம்பழத் தொழிற்சாலைக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. இதுதவிர கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தனிச்சுவை மிக்கவை

தனிச்சுவை மிக்க பெரியகுளம் மாம்பழங்களுக்கு தொடர்ந்து அதிக கிராக்கி இருந்து வருவதாலும், இதர விவசாயங்களில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாகவும் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். முன்பு மலையடிவாரங்களில் விளைவிக்கப்பட்ட மாமரங்கள் தற்போது நஞ்சை, புஞ்சை, வயல், காடு என்று மாற்று பருவநிலை கொண்ட மண்வளப் பகுதிகளிலும் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளன. குறைவான பராமரிப்பு, கூலியாள் தேவை குறைவு, மரப்பயிர் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு கரோனாவினால் மா விவசாயம் வெகுவாய் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக விளைந்த மாங்காய்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் வெகுவாய் நஷ்டமடைந்தனர். ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளை விட மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும். பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால்தான் அதிக காய்களை மகசூலாகப் பெற முடியும் என்பதால் இதற்காக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேலும் திரட்சியான சதைப்பிடிப்பு, கூடுதல் நிறம் போன்றவற்றிற்காகவும் தனித்தனி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் விவசாயிகள் பராமரிப்புப் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

கேரளாவில் கரோனா

இது குறித்து பெரியகுளம் மா விவசாயி வெற்றிவேல் கூறுகையில் பெரியகுளம், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதிய விளைச்சல் இருந்தும் கரோனாவினால் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை 50 சதவீதம் அதிகமாக பூக்கள் பூத்துள்ளன. இந்நிலையில் முக்கிய விற்பனை பகுதியான கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

விளைச்சல் இருந்தால் விலை கிடைப்பதில்லை. சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நிரந்தர விலை கிடைக்க இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளையும், குளிர்பதன கிட்டங்கிகளையும் அரசு அமைக்க வேண்டும். பூக்களை தேன் பூச்சிகள் தாக்கும் நிலை உள்ளதால் மருந்து தெளித்து வருகிறோம். இதே போல் கொக்கிப்புழு, தண்டு துளைப்பான், தத்துப்பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த தனித்தனி மருந்துகள் தெளிக்க வேண்டியுள்ளது. மா விவசாயத்தைப் பொறுத்தளவில் ஆண்டுக்கு இரண்டு முறை உழவு அவசியம்.

மருந்து, உரம் போன்ற செலவினங்கள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே இதற்கு மானியம் அளிக்க வேண்டும். அல்லது இலவசமாக வழங்கினால் செலவு குறையும். தோட்டக்கலைத்துறையினர்பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் புதிய ரகங்களை கண்டுபிடித்து வருவதுடன், மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால் சந்தைப்படுத்துதலில் பலவீனமான நிலையே உள்ளது.

பெரியகுளம் மா விவசாயத்தின் பாரம்பரியத்தைக் காக்கும் வகையில் உள்ளூரிலேயே பெரிய அளவிலான சந்தைகளை ஏற்படுத்த வேண்டும். மதிப்புக் கூட்டுதல் மூலம் ஜூஸ், ஊறுகாய், வடாகம், நூடுல்ஸ், பொடி, ஜாம் என்று பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கும். சீசனுக்குள் மாங்காய்களை விற்பனை செய்து முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் விவசாயிகளுக்கு ஏற்படாது. அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விளைச்சல் குறைபாடு, விளைச்சல் இருந்தால் விலையில் மாறுபாடு என்று இரட்டைத் தாக்குதலை மா விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதுதவிர விளைந்த காய்களை குரங்குகள் கடித்துக் குதறுவது, வவ்வால், கிளி போன்ற பறவைகள் கொத்தி விரயம் ஏற்படுத்துவது என்று காய்களை சந்தைக்கு அனுப்பும் வரை பல்வேறு சிரமங்களை மா விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
முக்கனிகளில் முதல் கனி. இலக்கியங்களில், புராணங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மாங்காய்களை விளைவித்துத் தருவதில் தொடர் நெருக்கடிகள் இவர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாதா ஊட்டாத சோறை மா ஊட்டும் என்று தாய்மைக்கு நிகராக கூறப்படும் இந்த பழம் உருவாவதிலும், சந்தைப்படுத்தலிலும் ஏற்படும் நெருக்கடிகளை களைந்து விவசாயிகளுக்கு அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாற்று சீசனை உருவாக்க முயற்சி

வயதான, காய்ப்பு குறைந்த மரங்களின் மகசூலை அதிகரிக்கவும், மாற்று சீசனை உருவாக்கவும் கல்தார் எனும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. வேர், பட்டைகளில் ஊற்றி பூக்கும் தன்மை உருவாக்கப்படுகிறது. இதனால் வயதான மரங்கள் வெட்டப்படுவது குறைந்துள்ளது. மேலும் சீசன் இல்லாத நேரங்களிலும் மாங்காய் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

செயற்கையாக விலையை குறைக்கும் வியாபாரிகள்

வெளியூரில் உள்ள கூழ் தொழிற்சாலைகள் பருவம் முடியும் நேரங்களிலே கொள்முதல் செய்கின்றன. மரங்களில் இனியும் காய் நீடித்திருக்க வாய்ப்பில்லை. பழுத்து வீணாகி விடும் என்ற தருணத்தை குறிவைத்து வியாபாரிகளும் களம் இறங்குகின்றனர். இதனால் நஷ்டத்தைத் தவிர்க்க குறைவான விலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற பரிதவிப்பில் கிடைத்த விலைக்கு விவசாயிகள் விற்று வருகின்றனர்.பூத்து குலுங்கும் மாமரங்கள்விவசாயிகள்பராமரிப்பு பணிகள் மும்முரம்Mango trees

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x