Published : 14 Feb 2021 10:08 AM
Last Updated : 14 Feb 2021 10:08 AM

திண்டுக்கல் மாவட்டத்தின் ஏழு தொகுதிகளிலும் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்: மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டி  

திண்டுக்கல்  

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள், நான்கு ஆண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மற்ற கட்சியினர் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தற்போதே வேட்பாளர்களுடன் மக்களை சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், வேடசந்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் நிலக்கோட்டை தொகுதி தனித்தொகுதி ஆகும். தற்போது நான்கு தொகுதிகள் திமுக வசமும், மூன்று தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளது. கடந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

அப்போது பெற்ற வாக்குகளைவிட கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளை பெற்றது. எனவே இந்த முறை நம்பிக்கை யுடன் மீண்டும் தனித்து களம் இறங்கியுள்ளனர். பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என இன்னமும் முதற்கட்டத்தையே முடிக்காதநிலையில், நாம் தமிழர் தனித்து களம் இறங்குவதால் யாரையும் எதிர்பார்க்காமல், யாருக் காகவும் காத்திராமல், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.

மேலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாதி ஆண்கள், பாதி பெண்கள் என வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படுவர் என அக்கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள நான்கு தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் நத்தம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பேராசிரியர் சிவசங்கரன் மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் ஜெயசுந்தர், பழநி தொகுதியில் வினோத், ஆத்தூர் தொகுதியில் சைமன்ஜஸ்டின் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
பெண்களுக்கென நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிலக்கோட்டை தொகுதியில் வசந்தாதேவி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்திதேவி, வேடசந்தூர் தொகுதியில் போதுமணி ஆகியோரை போட்டியிடச் செய்ய கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது.

இவர்கள் தற்போது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். நத்தம் தொகுதி வேட்பாளரான சிவசங்கரன் ஒரு மாதமாக கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து வருகிறார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் ஜெயசுந்தரம், தொகுதி மக்களிடம் அறிமுகமாகும் வகையில் தொகுதிக்குள் வாக்களிக்க வேண்டி கட்சி சின்னம், தனது புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மற்ற வேட்பாளர்களும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வருவது மற்ற கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x