சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 8 கோயில்களுக்கு தலா ஒரு பசு, கன்றை வழங்கினார். உடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர்.படம்: க.ஸ்ரீபரத்
சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 8 கோயில்களுக்கு தலா ஒரு பசு, கன்றை வழங்கினார். உடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர்.படம்: க.ஸ்ரீபரத்

18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்; சென்னை தி.நகரில் பத்மாவதி தாயாருக்கு கோயில்: பூமி பூஜையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

Published on

சென்னையில் நடைபெற்ற, பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு, பழம்பெரும் நடிகைகாஞ்சனா, தி.நகர் ஜி.என்.செட்டிசாலையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை வழங்கினார். இந்தஇடத்தில் பத்மாவதி தாயார் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோயிலின் கட்டுமான பணியைத் தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முன்னதாக, கோயில்களுக்கு பசு, கன்று வழங்கும் ஆந்திர அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இலவச பசு, கன்று வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா - பத்மாவதி கோயில், மயிலாப்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட 8 கோயில்களுக்கு தலா ஒரு பசு, கன்று வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, காலை 8.42 மணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.

அப்போது, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:

பசுக்களுக்கு பூஜை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு தர்ம செயல்களில்ஈடுபட்டு வருகிறது. கன்னியாகுமரியில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் சிறப்பாகநடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு பசு, கன்று வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்து தர்மத்தை பல இடங்களில் கொண்டு சேர்க்க பசுக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். இதைபொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ், தெலுங்குபோன்ற மொழிகளில் சொற்பொழிவுகளை நடத்த வேண்டும். பசு, கன்று வழங்குவதை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பத்மாவதி தாயார் கோயில் கட்டும் பணி 18 மாதங்களில் நிறைவடைந்து பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும். மேலும், உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலின் பூமி பூஜை வரும்22-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் தமிழக அரசு வழங்கியுள்ள தலா 10 ஏக்கர் நிலத்தில் எங்கு கோயில் கட்டலாம் என்றுபொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பசு, கன்று தேவைப்படும் கோயில்களுக்கு அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள் தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கோரிக்கை மனு அளிக்கலாம். பசு, கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உறுதி அளிக்க வேண்டும்” என்றார்.

நிலத்தை தானமாக வழங்கியபழம்பெரும் நடிகை காஞ்சனாகூறும்போது, “ஸ்ரீ பத்மாவதிதாயாருக்கு கோயில் கட்டுவதற்காக நிலத்தை அளித்ததற்கு பெருமைப்படுகிறோம். சென்னையில் பத்மாவதி தாயார் எழுந்தருளி, அனைவரும் செல்வம் மற்றும் நலம் பெற துணை நிற்பார்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in