Last Updated : 14 Feb, 2021 03:17 AM

 

Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை; மாறிமாறி கூட்டணி வைப்பதால் கம்யூனிஸ்ட்களின் தனித்தன்மை பாதிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

மாறிமாறி கூட்டணி வைப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்தன்மை பாதிக்கத்தான் செய்யும் என்றும், திமுக கூட்டணியில் முறையான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, இன்று சில தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்கும் அளவுக்கு பலவீனம் அடைந்துள்ளதே?

முதல் பொதுத்தேர்தலின்போது தமிழகம் தனி மாநிலமாக இல்லை. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் பல பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்தன. எனவே, அந்தத் தேர்தலை இன்றைய சூழலுடன் ஒப்பிட முடியாது. ஆனாலும், தமிழகம் தனி மாநிலமான பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்து செல்வாக்கு பலவீனப்பட்டுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. விடுதலைக்குப் பிறகு மதம், ஜாதி, இனம், மொழி ரீதியாக மக்களை அணித் திரட்டும் கட்சிகளும், முதலாளித்துவ கட்சிகளும் அதிக அளவில் தோன்றின. இவையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதும் அதன் வீரியத்தை குறைத்துவிட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி உடைந்ததுதான் பின்னடைவுக்கு காரணம் என்கிறீர்களா?

கம்யூனிஸ்ட் கட்சி உடையாமல் இருந்திருந்தால் செல்வாக்கு உயர்ந்திருக்கும் என்று சொல்லவில்லை. தவறான பாதையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சென்றுவிடக் கூடாது என்பதால் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரியான பாதையில் ஒன்றாக பயணித்திருந்தால் கட்சி இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும். அன்று கட்சி உடையாமல் தவறான பாதையில் சென்றிருந்தால் மொத்தமாக இல்லாமல் போயிருப்போம். மேற்கு வங்கம்,திரிபுராவில் நீண்ட காலம் கம்யூனிஸ்ட ஆட்சியில் இருந்ததும், கேரளத்தில் இன்றும் ஆட்சியில் இருப்பதும் அன்று எடுத்த முடிவு சரி என்பதைத்தான் காட்டுகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கட்சி பிளவுபட்டதால் வேறு சில மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டதையும் நான் மறுக்கவில்லை.

கட்சிக்கு வெளியே மார்க்சிஸ்ட் நடத்தும் பல்வேறுசங்கங்களில் பல லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாக்களித்தாலே மார்க்சிஸ்ட் பலமிக்க கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லையே?

விவசாய பிரச்சினை, தொழிற்சங்க பிரச்சினை என்று ஒரு கோரிக்கைக்காக திரளும் மக்கள் உடனே கம்யூனிஸ்ட்டாக மாறிவிட மாட்டார்கள். பல்வேறு கூறுகளாக மக்களைப் பிரிக்கும் முயற்சிகள் நடக்கும்போது, ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், வர்க்க ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும், மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்கான பணியாக இதனைச் செய்கிறோம். இது அரசியல் மாற்றமாக வர குறிப்பிட்ட காலம் எடுக்கும்.

கம்யூனிஸ்ட் கொள்கை மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இருப்பதை சமூக ஊடகங்களில் பார்க்கப் முடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க மார்க்சிஸ்ட் கட்சியிடம் திட்டம் உள்ளதா?

இளைஞர்கள், மாணவர்கள் என்று பரவலான மக்களிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சியில் இடதுசாரி சிந்தனையாளர்களின் புத்தகங்கள் அதிகமாக விற்கின்றன. மாநில, மாவட்ட அளவில் சமூக ஊடக ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 50 வாட்ஸ்அப் குழுக்களை அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி கூட்டணி வைப்பதால் கம்யூனிஸ்ட்களின் தனித்தன்மை பாதிக்கப்படாதா?

சில இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ, பதவிக்காகவோ நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அரசியல் சூழல், தேவைகளைக் கணக்கில் கொண்டே கூட்டணி அமைக்கிறோம். அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தில் கால் பதிக்க மதவாத பாஜக திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய அரசியல் கடமை இடதுசாரிகளுக்கு உண்டு. ஒவ்வொரு தேர்தலிலும் சூழல் மாறுகிறது. மார்க்சிஸ்ட் போன்ற சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது கம்யூனிஸ்ட்களின் தனித்தன்மை சற்று பாதிக்கத்தான் செய்யும். அதனை நான் மறுக்கவில்லை.

மதச்சார்பின்மையை உறுதியுடன் பேசும் மார்க்சிஸ்ட், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை பாஜக விமர்சிக்கிறதே?

ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கும் பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே,பாதிக்கப்படும் சிறுபான்மையினரையும், பாதிப்புக்கு காரணமான இந்துத்துவ சக்திகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்பது, அவர்களுடன் இணைந்து போராடுவது மதச் சார்பின்மைக்கு எதிரானது அல்ல.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கி விட்டதா? உங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

முறையான கூட்டணி பேச்சு இதுவரை தொடங்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வரட்டும். நெருக்கத்தில் பேசலாம் என்று திமுக நினைக்கலாம். அதிகாரப்பூர்வமாக அவர்கள் எதையும் சொல்லவில்லை. “கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொகுதிப் பங்கீடு செய்வோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக பிரச்சாரம் செய்கின்றன. இணைந்து பொதுக்கூட்டம் கூட நடைபெறவில்லையே?

தனித் தனியாக பிரச்சாரம் செய்வதும் கூட்டணிக்கு பலம்தான். சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் போன்றவர்கள் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததும் கூட்டணி கட்சிகள் இணைந்து பிரச்சாரம் செய்வோம்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள், கமல்ஹாசனின் கட்சி இணை வாய்ப்புள்ளதா?

திமுக கூட்டணியில் இனி புதிதாக கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்று கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினே கூறிவிட்டார். அதன்பிறகு நான் சொல்ல எதுவும் இல்லை.

சசிகலா வருகையால் அதிமுகவில், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?

சசிகலா வருகையில் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர் தமிழகத்தின் ஏகோபித்த தலைவரோ, ஒரு கட்சியின் தலைவரோ அல்ல. அதிமுகவில் ஏற்கெனவே குழப்பங்களுக்கு பஞ்சமில்லை. சசிகலா முழுவீச்சில் அரசியலில் இறங்குவேன் என்று அறிவித்துள்ளதால் அதிமுகவில் குழப்பம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x