Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

தஞ்சாவூரில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பணியாளர்களுக்கு திடீர் மயக்கம்: தடுப்பூசி காரணமில்லை என மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் 3 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அங்குபணிபுரியும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 25 பேருக்கு நேற்று காலை கரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், அவர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி போடப்பட்ட 3 மணி நேரத்துக்குப் பின், மருத்துவப் பணியாளர் மனோகரன்(54), சுகாதாரப் பணியாளர்கள் சாந்தி(48), விமலாமேரி(53) ஆகியோர் திடீரென மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு இயல்புநிலைக்கு திரும்பிய 3 பேரும், தங்களின் பணியைத் தொடர்ந்தனர்.

இதற்கிடையே, பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் வருகைப் பதிவேட்டில் வருகையை பதிவு செய்ய முடியாது என்றும், கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டதால்தான், 3 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால்தான்அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என சக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

தடுப்பூசி காரணமல்ல

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.மருதுதுரை, செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,908 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் இதுவரை 10,122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் யாருக்கும் இதுவரை எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை.

29-வது நாளான நேற்று ஏற்கெனவே முதல் தவணை எடுத்துக் கொண்டவர்களுக்கு 2-வது தவணையும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பணியிலிருந்தபோது மயக்கமடைந்த 3 பணியாளர்களை பரிசோதனை செய்துபார்த்ததில், அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இருந்ததால்தான், மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கும், அவர்கள் மயக்கமடைந்ததற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. தடுப்பூசிக்கு பிந்தைய ஒவ்வாமையும் அவர்களுக்கு ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்திவிட்டனர். யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x