Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

முதுகுளத்தூர் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே வாக்கு கேட்டு மலேசியா பாண்டியன் போஸ்டர்: திமுக கூட்டணியில் சலசலப்பு

முதுகுளத்தூரில் மலேசியா பாண்டியனுக்கு வாக்களிக்கக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மலேசியா பாண்டியன் மீண்டும் போட்டியிடப் போவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட் டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தனிச் சின்னத்தில் போட்டி, கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளால் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மலேசியா பாண்டியன் மீண்டும் போட்டியிடப் போவதாகவும், அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதி யில் அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலேசியா பாண்டியன். மொத்தம் உள்ள 8 காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களில் அதிக அளவில் ஊடகங்களுக்கு பரிச்சயம் இல்லாதவராகவே இருந்தார் மலேசியா பாண்டியன். ஆனால், கடந்த 2019 நவம்பரில் பரமக்குடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்துவதாகப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகளின் கோபத்துக்கும் ஆளானார்.

முதுகுளத்தூர் தொகுதியில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உட்பட அக்கட்சிப் பிரமுகர்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், மலேசியா பாண்டியனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள், திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x