தாய்ப்பால் சுரக்க உதவும் நெத்திலி மீன்களுக்கு தட்டுப்பாடு
மீன்கள் வரத்துக் குறைவால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் நெத்திலி மீனை சமைத்துக கொடுப்பது இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பின் பற்றப்படுகிறது. இதனால் ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் பிடிபடும் நெத்திலி மீன்கள் கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இதுகுறித்து பாம்பன் பகுதி மீன வர்கள் கூறியதாவது:
ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் காணப்படும் நெத்திலி மீன் எல்லா மீன் களையும் விட உடல் மிக மெல்லியதாக இருக்கும். இம்மீனின் மேல் பகுதியில் பச்சைக் கோடும், கீழ்பகுதியில் இரத்தச் சிவப்புக் கோடும் இருக்கும். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் இனப்பெருக்கத்துக்காக கரை ஓரங்களில் வாழும். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் இனப்பெருக்கத்துக்குப் பிறகு ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்று விடும். இந்த மீனுக்கு Anchovy என்பது ஆங்கிலப் பெயராகும். நெத்திலி மீன்கள் மருத்துவக் குணங்கள் அதிகமுள்ளவை. இதனால் தாய்மார்களுக்கு கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக சமைத்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் ராமேசுவரம் நெத்திலி மீன்களுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும்.
ராமேசுவரம் கடற்பகுதியில் நெத்திலி மீன் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300க்கு விற்ற நெத்திலி மீன். தற்போது ஒரு கிலோ ரூ.400 வரை தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது, என்றனர்.
