காதலர் தினத்திலும் கைகொடுக்காத கொய்மலர்-விலை குறைவால் சாகுபடியாளர்கள் வேதனை

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் வி்ற்பனைக்காக தயார் நிலையில் உள்ள வண்ண வண்ண கொய் மலர்கள்.
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் வி்ற்பனைக்காக தயார் நிலையில் உள்ள வண்ண வண்ண கொய் மலர்கள்.
Updated on
1 min read

கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் கொய்மலருக்கு காதலர் தினத்தையொட்டி அதிக கிராக்கி ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும்விலை உயர்ந்து விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இம்மலர்கள் இந்த ஆண்டு விலை குறைவாகவே உள்ளதால், ஏற்கனவே கரோனா கால பாதிப்பில் இருந்து மீளாத கொய்மலர் சாகுபடியாளர்களுக்கு மீண்டும் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. பிரகாசபுரம், குண்டுபட்டி, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பசுமைக்குடில் அமைத்து கொய்மலர் சாகுபடி செய்து வருகின்றன.

உயர்ரக பூக்களான கார்னேசன், ஜிப்சோப்ரா, சார்ட்டிஸ், அஷ்டோமேரிய, பேட் ஆப் பாரடைஸ் ஆகிய வகை கொய்மலர்கள் அதிகம் பயிரிடப்படு கிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றனர்.

கொய்மலர்கள் மலர்க்கொத்துக்கள், மேடை அலங்காரங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர் அறுவடை மும்முரமாக இருக்கும். தேவை அதிகம் என்பதால் விலையும் கணிசமாக உயர்ந்து விற்பனையாகும்.

கடந்த ஆண்டு 20 பூக்கள் அடங்கிய மலர்க்கொத்து ரூ.250 வரை விற்பனையானது. கடந்த ஆண்டைப்போலவே தற்போதும் எதிர்பார்த்த விற்பனை இல்லை என்கின்றனர்.

20 பூக்கள் அடங்கிய கொய்மலர் கொத்து ரூ.150 வரை மட்டுமே விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ஐந்து லட்சம் கொய்மலர்கள் விற்ப னைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 50 ஆயிரம் மலர்கள் மட்டும் அனுப்பினர். கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு அரசிடம் நிவாரணம் கோரியும் இதுவரை கிடைக்கவில்லை. இழப்பை சரிசெய்ய முடியாத நிலையில், வழக்கமாக காதலர் தினத்தில் விலை அதிகரித்து விற்பனையாகும் கொய்மலர் இந்த ஆண்டு விலை ஏற்றம் இன்றி காணப்படுவதாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொய்மலர் சாகுபடிக்காக பசுமைக் குடில்களை பராமரிக்கும் செலவே அதிகம் உள்ள நிலையில் இந்தநிலை நீடித்தால் கொய்மலர் சாகுபடியில் வருவாய் பார்க்க முடியாது என்பதால் பலரும் இதைவிட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in