சோளிங்கரில் சினிமா பாணியில் பின்நோக்கி சென்று விபத்துக்குள்ளான காரில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சோளிங்கரில் விபத்தை ஏற்படுத்தி விட்டு சினிமா பாணியில் அதி வேகத்தில் பின்நோக்கிச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரில் இருந்து சுமார் 750 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் நேற்று அதிகாலை 6 மணியளவில் வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், காரில் இருந்தவர்கள் கீழே இறங்கவில்லை. திடீரென கார் பின்நோக்கி மீண்டும் வேகமாக சென்றது.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அந்த காரை விரட்டிச் சென்றனர். ஆனால், அந்த கார் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பின்நோக்கியே வேகமாகச் சென்றது. அப்போது, சாலையோரம் சென்ற வாகன ஓட்டி ஒருவர் மீது மோதியதுடன் தேநீர் கடை ஒன்றின் பந்தலையும் இடித்த கார், அருகில் இருந்த சிறுபாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

சினிமா பாணியில் பின்நோக்கி வந்ததுடன் விபத்துக்குள்ளான காரில் இருந்து செம்மரக்கட்டைகள் கதவை திறந்துகொண்டு வெளியே வந்து விழுந்ததைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் திகைத்து நின்றனர். அதற்குள் காரில் இருந்து வெளியே வந்த 2 பேர் தப்பியோடினர்.

இதுகுறித்த, தகவலின்பேரில் சோளிங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். விபத்துக்குள்ளான காரில் சுமார் 750 கிலோ எடையுள்ள 16 துண்டு செம்மரக் கட்டைகள் இருந்தன.

செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ஆற்காடு வனத்துறை வசம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in