

தேர்தலுக்காக ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துவதாக தமாகா மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தமாகா மாணவரணி சார்பில் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில மாணவரணி தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
தமாகா மதுரை மாவட்ட தலைவர் சேதுராமன், முன்னாள் எம்பி ராம்பாபு, மாநில நிர்வாகி பரத் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், தமாகா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுகளும் நிறைய சாதனைகள் செய்துள்ளது. ஏழை எளியவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது.
சாமானியர்களும் சந்திக்கும் எளிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது புதிய அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த நாலரை ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காதவர், அக்கறை காட்டாதவர் தற்போது தேர்தலுக்காக மக்களிடம் சென்று 100 நாட்களில் குறைகளைத் தீர்ப்பதாக மனுக்களை வாங்கும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதிலும் அவரது குடும்பத்தினரான தங்கை கனிமொழி, மகன் உதயநிதி மட்டும்தான் செல்கின்றனர். மூத்த தலைவர்களான துரைமுருகன், நேரு, பொன்முடி போன்றவர்கள் செல்வதில்லை.
மீண்டும் குடும்பக் கட்சியாக, ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக திமுக மாறிக்கொண்டிருக்கிறது. நீட் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், கெயில் எரிவாயு போன்ற திட்டங்களுக்கு திமுக காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் கையெழுத்து போடப்பட்டது.
அந்த உண்மைகளை மறைத்து பொய்யான பிரச்சாரங்களை திமுக - காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் நலனுக்காக மத்திய பாஜக அரசிடமிருந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தது அதிமுக அரசு. இத்தகைய சூழலில் அதிமுகவின் நல்ல திட்டங்களை சொல்லி கூட்டணி வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும், என்றார்.
இதில், மாணவரணி மாவட்ட தலைவர் ஜோஸ் டேனியல் (மதுரை), பிரபு (தேனி), உஸ்மான் (திண்டுக்கல்), பார்த்திபன் (விருதுநகர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.