

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் மகன் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதிலளித்துள்ளார்.
மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மதுரை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற்று உறுதியாக முதல்வர் ஆவார். 9 ஆண்டுகள் தூங்கிவிட்டு தற்போது தமிழக முதல்வர் தினமும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
மத்திய அரசின் அடிமை அரசாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்திற்கு வர வேண்டிய எந்தத் திட்டமும் வரவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடும் விவசாயிகளைப் பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவையும் பாஜகவையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால் திமுக கூட்டணியில் எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம்.
எங்கள் கூட்டணியில் புதிதாக எந்தக் கட்சிகளும் இடம்பெற வாய்ப்பு இல்லை. தேர்தலுக்குப் பிறகு மதிமுகவுக்கு புத்துயிர் அளிக்க புது திட்டங்களை வைத்துள்ளேன். அதை தேர்தலுக்கு பிறகு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: உங்கள் மகன் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா?
பதில்: அவர் நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வார். அவ்வளவுதான். அதற்காக அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.
கேள்வி: கமலின் மக்கள் நீதி மையம் திமுக கூட்டணியில் இணைவதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா?
பதில்: கமல் திமுக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
கேள்வி: சசிகலா விடுதலையானதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:அவர் ஜெயிலில் இருந்து வந்துள்ளார்.
கேள்வி: ஏன் கிடைக்கிற ‘சீட்’டை பெற்றுக்கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டீர்கள்?
அதிமுக-பாஜக கூட்டணி எக்காரணம் கொண்டு வெற்றிப்பெறக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகதான்.