

அரசின் பதிவுத் துறை, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுமார் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (13.2.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், மத்திய சென்னை பதிவு மாவட்டம், நொளம்பூரில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டிடம் மற்றும் நாகப்பட்டினம் பதிவு மாவட்டம் - தகட்டூர், திருவண்ணாமலை பதிவு மாவட்டம் - கடலாடி மற்றும் மங்கலம் ஆகிய இடங்களில் 2 கோடியே 91 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்குத் தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மத்திய சென்னை பதிவு மாவட்டம், நொளம்பூரில் 6,326.88 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டிடத்தைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இப்புதிய அலுவலக வளாகக் கட்டிடத்தில், அண்ணா நகர், அசோக் நகர், வில்லிவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். மேலும், இவ்வளாகம், வாகன நிறுத்துமிடம், மின்னணு முத்திரைத்தாள் அலுவலகம், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திருவண்ணாமலை பதிவு மாவட்டம் - கடலாடி மற்றும் மங்கலம் ஆகிய இடங்களில் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
கடந்த 2017-18ஆம் ஆண்டு வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 9.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, ஏற்கெனவே 9 சார் பதிவாளர் அலுவலகங்களுக்குக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள நாகப்பட்டினம் பதிவு மாவட்டம் - தகட்டூரில் 90 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.