குஷ்பு: கவர்ச்சி நடிகையின் அரசியல் அடையாளம்

குஷ்பு: கவர்ச்சி நடிகையின் அரசியல் அடையாளம்
Updated on
2 min read

1990-களில் தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சிக் கன்னியாக உலா வந்த குஷ்புவுக்கு அரசியல் பிரவேசம் என்பது போர்க்களத்தை முதன் முதலில் காணும் அனுபவம் போன்றதாகவே இருந்திருக்க வேண்டும்.

திருமணத்திற்கு முந்தைய உடலுறவு குறித்து அவர் அளித்த பேட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்ப அதன் விளைவாக வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 22 வழக்குகளை அவர் சந்திக்க நேர்ந்தது.

2010-ல் திமுகவில் தன்னை இனைத்துக் கொண்டார் நடிகை குஷ்பு. அவர் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி ஆகின. கட்சியில் ஒரு பிரதான முகமாக அடையாளம் காணப்பட்டார்.

கட்சியில் அவருக்கு இருந்த முக்கியத்துவம், தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என சலசலக்கப்பட்டபோது உணரப்பட்டது.

திராவிடர் கழகம் நிறுவனர் இ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் மணியம்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக அரசியலில் கால் பதிக்கும் கலைத்துறையினரின் பயணம் நீடித்து இருக்க, குஷ்புவின் அரசியல் பயணம் தடை பட்டுள்ளது.

திமுக-வில் குஷ்புவால் ஏன் தொடர முடியவில்லை என்பது குறித்து சினிமா பத்திரிகை காட்சிப்பிழை-யின் ஆசிரியர் சுபகுணராஜன் கூறுகையில், "பல ஆண்டுகளாக கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பலர் இருக்க பின்நாளில் வந்த ஒரு நடிகைக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் போது அதிருப்தி அலைகள் எழுகின்றன.

இந்த நிலை குஷ்புவுக்கு மட்டும் ஏற்படவில்லை. இதற்கு முன்னர் திமுகவில் இருந்த டி.ராஜேந்தர், சரத்குமார், பாக்யராஜ் போன்ற நடிகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் சரத்குமாரின் செல்வாக்கையும், ஜாதியையும் அரசியல் ஆதாயமாக்க நினைத்த திமுக-வால் ஒரு கட்டத்துக்கு மேல் கட்சியில் அவரது வளர்ச்சிக்கு உதவ முடியவில்லை.

நடிகர்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடும் போது தங்கள் தகுதிக்கு மீறி வசப்படுத்த விரும்புகின்றனரோ என தோன்றுகிறது. சரத்குமார், தனிக்கட்சி ஆரம்பித்ததும் பின்னர் அதில் சோபிக்க முடியாமல் போனதும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், வாகை சந்திரசேகர், குமரிமுத்து போன்ற ஒரு சில நடிகர்கள் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடம் இருந்து பெரிய அளவில் ஆதாயம் ஏதும் எதிர்பார்க்காததாலேயே கட்சியில் நிலைத்திருக்கின்றனர். கிடைத்ததை வைத்து தன்னிறைவோடு இருப்பவர்கள் மட்டுமே அரசியலில் நீடிக்க முடிகிறது" என்றார்.

டெல்லி டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சார்ந்த படிப்புகள் பேராசிரியர் ராஜன் கிருஷ்ணன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றி தமிழக அரசியலில் ஒரு சினிமாக் கலைஞனின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்வது சற்று கடினமாகவே இருந்தது.

தமிழக அரசியல் களத்தில் இருந்த சாமானயர்களில் யதார்த்தமான விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு வரலாற்று நிகழ்வின் அடையாளமாக இருந்தார் எம்.ஜி.ஆர். என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆரின் இடத்தை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது.

வாக்குவங்கி அரசியலுக்கு, வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்க பரிச்சியமான முகம் தேவைப்படுகிறது. அந்த வகையில், திமுகவுக்கு குஷ்பு, பாஜகவுக்கு ஹேமமாலினியும், சமாஜ்வாதி கட்சிக்கு ஜெயப்பிரதாவும் பயன்பட்டதைப் போல் பயன்பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in