Published : 13 Feb 2021 03:57 PM
Last Updated : 13 Feb 2021 03:57 PM

அரசின் மெத்தனத்தால் பயன்படுத்தாமல் வீணான 13,190 கரோனா தடுப்பூசிகள்; காத்திருப்போருக்குப் பயன்படுத்தியிருக்கலாம்: கி.வீரமணி வேதனை

சென்னை

கரோனா சிகிச்சையில் 13,190 கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் வீணாகிப் போயுள்ளன. யாருக்குத் தடுப்பூசி என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளிக்காததே இதற்குக் காரணம் என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஒரு தகவலைக் கூறியிருக்கிறார். கரோனா தடுப்பூசி என்பதை உடனடியாகப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகிப் பயனற்றுப் போய்விடும் என்பது மருத்துவத் துறையும், ஆட்சியாளரும் அறிந்ததே. உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போட முடியாததால் தமிழ்நாட்டில் 13,190 தடுப்பூசிகள் இதுவரை பயனற்றுப் போய் உள்ளன என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதல்லவா?

மத்திய அரசிடம் வயதான மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார், சுகாதாரத் துறைச் செயலாளர். இந்தத் துறை Concurrent List என்ற ஒத்திசைவுப் பட்டியலில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே அதிகாரம் பெற்ற துறையாகும்.

இருந்தும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பிய பிறகு, அந்தந்த மாநில அரசும், சுகாதாரத்துறையும் அதன் தேவை முன்னுரிமை வாய்ப்புப்படி பயன்படுத்திடும் உரிமையை மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த 13,190 தடுப்பூசிகள் வீணாகியிருக்குமா?

இதற்குக் காரணம் ஆட்சியாளரின் அணுகுமுறையில் உள்ள கோளாறுகளே. எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் பலரும் பதிவு செய்து பல வாரங்கள் காத்திருப்பு ஒருபுறம், வீணாகும் தடுப்பூசிகள் இன்னொரு புறம் என்பது நியாயம்தானா? இப்போதாவது உடனடியாக விரும்பும், விண்ணப்பித்த மூத்த குடியினருக்குக் கரோனா தடுப்பூசி போடுவதை அனுமதித்து, தாமதிக்காமல் செயல்படுவது நல்லது. யோசிக்குமா அரசு?”

இவ்வாறு கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x