டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 20 சதவீதம் உயர்வு; கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தியுள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்தச் சங்கத்தின் தலைவர் என்.முருகேசன், செயலாளர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:

"உலக நாடுகளின் கச்சா எண்ணெய் சந்தை விலைக்கேற்றவாறு அப்போதைய காங்கிரஸ் அரசு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியது. தற்போதைய அரசு விலையை உயர்த்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

கடந்த ஆண்டு மே வரை ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் விலையை உயர்த்தி வருகின்றன.

தற்போது பெட்ரோல் விலை ரூ.90 ஆகவும், டீசல் விலை ரூ.83 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து தொழில் தடுமாறும் நிலையில் உள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

டீசல் விலை உயர்வால் வேறு வழியின்றி சரக்கு போக்குவரத்துக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளோம். இதனால், காய்கறி, மளிகை, பிற அன்றாடப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலியப் பொருட்களை, உள்நாட்டுத் தேவைபோக ஏற்றுமதி செய்து, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் விலை கட்டுக்குள் இருக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in