கொருக்குப்பேட்டையில் சோகம்: மனைவி இறந்த துக்கம் தாளாமல் 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

கொருக்குப்பேட்டையில் சோகம்: மனைவி இறந்த துக்கம் தாளாமல் 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை
Updated on
2 min read

சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவி இறந்து ஒரு மாதமே ஆன நிலையில், துக்கம் தாளாமல் சோகத்தில் இருந்த ஏசி மெக்கானிக் ஒருவர், தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் வசித்து வந்தவர் வினோத் (32). இவர் ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு கவின் (எ) நவீன் (3), பிரவீன் (எ) சக்தி (1) என்கிற 2 குழந்தைகள் இருந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வினோத், தன் மனைவி கவிதாவுடன் பொன்னேரியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கவிதா தாய் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பணிக்கும் செல்ல முடியாமல், மனைவியின் நினைவாகவே வினோத் வாடிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்த வினோத் நேற்று நள்ளிரவு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து தனது இரு குழந்தைகளையும் கொன்ற அவர், வீட்டிலுள்ள மின்விசிறி மாட்டும் கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் வினோத்தின் உடல் இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஆர்.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வினோத் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளைக் கொலை செய்த அந்த நேரத்திலும் அவர்களின் உடலில் எந்தக் காயமும் இல்லாமல் கொலை செய்துள்ளார் வினோத். சிறிய மனஸ்தாபத்தால், மனைவி அவசரப்பட்டு எடுத்த தற்கொலை முடிவாலும், பாதிக்கப்பட்ட கணவர், மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொள்ளாமல், குழந்தைகள் நிலையை எண்ணியாவது வாழாமல் அவரும் தற்கொலை முடிவெடுத்ததாலும் அன்பான குடும்பமே இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் சில நொடிகளில் ஏற்படும் ஒன்று. சற்று நேரம் அந்த எண்ணத்தைத் தள்ளிப்போட்டு நிதானமாக யோசித்தால், இதற்காகவா நாம் இப்படி முடிவெடுத்தோம் என்று எண்ணத் தோன்றும் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவல்லாமல் இதுபோன்ற நேரங்களில் அரசு எண் 104-க்கு போன் செய்து மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சொன்னால் இலவச ஆலோசனை தர உளவியல் நிபுணர்கள் தயாராக உள்ளனர். மன உளைச்சல் ஏற்படும் நேரங்களில் தயங்காமல் இந்த எண்ணை அழைக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in