

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று நடந்த பட்டாசு விபத்தில் 19 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் அதே மாவட்டத்தில் சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். அவர்களில் பலத்த தீக்காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் பட்டாசு ஆலைகள் இருப்பதாலும், வெடிவிபத்து அதிகம் நடப்பதாலும், சிவகாசி பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று மீண்டும் சிவகாசியில் உள்ள காக்கிவாடன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை வீரர்கள், ஆம்புலன்ஸ்கள், போலீஸார் விரைந்துள்ளனர். தீ விபத்து குறித்த மேலதிகத் தகவல்கள் முழுமையாக விரைவில் வெளிவரும்.