Last Updated : 13 Feb, 2021 03:10 AM

 

Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரத்தை தெரிவிக்குமா அரசியல் கட்சிகள்?

தேர்தல் இலவசங்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் பாலாஜி, தொடர்ந்த பொதுநல வழக்கில் 2013 ஜூலை 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம், தேர்தல் நடைமுறையுடன்நேரடியாக தொடர்புடையது என்பதால், தேர்தல் ஆணையம் அதை ஒழுங்குபடுத்தலாம். தேர்தல் அறிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

அதன்படி, தேர்தல் ஆணையம் 2015-ம்ஆண்டு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் "தேர்தல் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், அதைநிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டு, வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார்களை பெற்ற இந்திய தேர்தல் ஆணையம், 2016 மே 14-ம் தேதி விளக்கம் கேட்டு இரு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலை பெற்று, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 2016 ஆகஸ்ட் 23-ம் தேதி ஆணையம் அனுப்பிய உத்தரவில் ‘‘நோட்டீஸுக்கான பதிலில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதேபோல தேர்தல்அறிக்கை வெளியிடும்போதும் தெரிவிக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் அதே தேதியில் அனுப்பிய உத்தரவில், "உங்கள் கட்சியின்தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை குறிப்பிடவில்லை. எதிர்காலத்தில் தேர்தல் அறிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கதிர்மதியோன் கூறும்போது, "வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். கடந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், அதன் தற்போதைய நிலையை, வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். கட்சிகளின் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்து, தேர்தல் தேதிக்கு குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x