

திருநெல்வேலியில் மதிமுக வளர்ச்சி, தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நிதியை வைகோவிடம் வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக பங்கேற்பதற்காக, தமிழகத்தில் 7 மண்டலங்கள் வாரியாக நிதி திரட்டுகிறோம். முதற்கட்டமாக திருநெல்வேலியில் நிதி பெறப்படுகிறது. சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். மக்களை சந்திக்கும் பணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்.
இந்த ஆட்சியில், தமிழகம் பல்வேறு அம்சங்களில் வஞ்சிக்கப்படுகிறது, சமூகநீதி அழிக்கப்படுகிறது. இதற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் திமுகவும், கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. மக்கள் மனதில் இருந்து இந்த அரசு அகற்றப்படும்.
தேர்தலில் மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் பேசவில்லை. திமுகவுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பார்த்து, ஆத்திரத்தில் தமிழக முதல்வர் தனது பிரச்சாரத்தில் பலவற்றை பேசுகிறார். தேர்தல் அறிவிப்பு வந்தபின் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.