Published : 19 Nov 2015 04:56 PM
Last Updated : 19 Nov 2015 04:56 PM

ரயில்வே தண்டவாளங்களில் இரும்பு வலை தடுப்பு: நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க மதுரை கோட்ட ரயில்வே புதிய திட்டம்

நிலச்சரிவு அபாயமுள்ள தண்டவாளங்களில் கற்கள், மண் விழுவதைத் தடுக்க இரும்பு வலை தடுப்பு அமைக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் தெரிவித்தார்.

அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு ஆண்டில் ரூ.420 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு 8 சதவீதம் அதிகரித்து ரூ.454.34 கோடி கிடைத்துள்ளது.

இதில் சரக்கு போக்குவரத்து மூலம் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.23.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 60 ரயில்வே லெவல் கிராசிங்குகளில் சூரியசக்தி மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன. பாம்பன் பாலத்தில் இருக்கும் இரும்பு கர்டரை மாற்ற ரூ. 6.76 கோடியும், புதிய தூக்குப்பாலம் அமைக்க ரூ.25 கோடியும் ஒதுக்கி ஆயத்தப்பணிகள் நடைபெறுகின்றன. 27 ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக டிக்கெட் எடுக்க வசதியாக 50 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ரயில் நிலையங்களில் எல்இடி ரயில் வருகை அறிவிப்பு பலகை, ரயில் வருகை, புறப்படும் நேரம் தெரிவிக்கும் அறிவிப்பு பலகை, ரயில்பெட்டி மற்றும் நடைபாதை வழிகாட்டி அமைக்கப்பட்டுள்ளன. ராமே சுவரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், தென்காசி, செங்கோட்டை, காரைக்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், பழநி மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலைங்களிலும் எல்இடி அறிவிப்பு பலகைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 30 மில்லியன் பயணிகள் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ரயில் நிலையம், ரயில்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது படித்த இளைஞர்கள் நேரில் வராமல் இன்டர்நெட் மூலமே டிக்கெட் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். 2018-19-ல் இந்த ஆர்வம் 54 சதவீதம் முதல் 75 சதவீதம் அதிகரிக்கும். அனைத்து ஏ-1 ரயில் நிலையங்களும் குப்பையில்லா ரயில் நிலையமாக மாற்றப்படும்.

பாலக்காடு-பொள்ளாச்சி ரயில் தற்போது திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், பாறைகள் விழுவதை தடுக்க இரும்பு தடுப்பு வலை அமைக் கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத் துரையில் 2.8 கி.மீ. தூரம் முதற்கட்டமாக இரும்பு தடுப்பு வலை அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.

மின் மயமாக்கல் மூலம் ரூ.25 கோடி சேமிப்பு

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் மேலும் கூறியது: ரயில் பாதை மின்மயமாக்கல் மூலம் மதுரை ரயில்வே கோட்டம் கடந்த ஒரு ஆண்டில் ரூ.25 கோடியை சேமித்துள்ளது. பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைகின்றனர். பயணிகள் சிரமமில்லாமல் நடைபாதைகளுக்கு செல்ல திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 3 லிப்ட்கள், மதுரை ரயில் நிலையத்தில் 4 லிப்ட்கள், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3 லிப்ட்டுகள் அமைக்கப்படுகிறது. கூடுதலாக 10,000 கி.மீ. ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படுகிறது. பயோ லாய்லெட் இல்லாத ரயில் நிலையங்களில் பயோ லாய்லெட் அமைக்கப்படுகிறது. 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்து சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுகிறது. ஏ-1, ஏ மற்றும் பி அந்தஸ்து ரயில் நிலையங்கள் அனைத்திலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x