மக்கள் என்னிடம் வைக்கும் கோரிக்கைகளை கண்டு முதல்வர் பழனிசாமி மிரண்டு போயிருக்கிறார்: விழுப்புரம் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

விழுப்புரம் அருகே காணைகுப்பம் கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மக்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
விழுப்புரம் அருகே காணைகுப்பம் கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மக்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
Updated on
1 min read

“நான் செல்லும் இடங்களில் மக்கள் என்னிடம் வைக்கும் கோரிக்கைகளை கண்டு முதல்வர் பழனிசாமி மிரண்டு போயிருக்கிறார்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், காணை குப்பம் கிராமத்தில் நேற்று 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர் தொகுதிகளுக்கு உட்பட்ட மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அடுத்த 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை மனுக்களை அளித்தவர்கள் அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஒப்புகை சீட்டுடன்கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம். ‘தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்றுஇல்லை’ என்பதை எந்தத் தொகுதிக்கு பயணம் மேற்கொண்டாலும் உணர முடிகிறது. மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை வைப்பதைப் பார்த்து முதல்வர் மிரண்டு போயிருக்கிறார்.

விழுப்புரத்தில் தடுப்பணை இடிந்து விழும் சத்தம், தாராபுரம் பாலம் விரிசல் விழும் சத்தம், கரூரில் மினி கிளினிக் விழும் சத்தம், நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி இடிந்து விழும் சத்தம் கேட்கும்.

பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணமாக, அண்மையில் தென்பெண்ணை ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்பணையே போதும். முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. இவர்களிடம் இருந்து மீட்கவே இந்தத் தேர்தல் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in