Published : 10 Nov 2015 11:06 AM
Last Updated : 10 Nov 2015 11:06 AM

தமிழக கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை; மக்கள் இயல்புவாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் நிலைக்கொண்டி ருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கொள்ளி டம், சீர்காழியில் 197 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகை துறை முகத்தில் 3-ம் எண் புயல் எச்ச ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வில்லை. மாவட்டத்தில் பல இடங் களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வயல்களில் தண்ணீர்

தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நடவு வயல்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் வீடு இடிந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். மாவட்டத்தில் 5 வீடுகள் சேதமடைந்தன. திருச்சி, பெரம்பலூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது.

அணைகள் நிரம்பின

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னி யாகுமரி, தூத்துக்குடி மாவட்டங் களில் இருந்து விசைப்படகு மீன வர்கள் நேற்று கடலுக்கு செல்ல வில்லை. பைபர் படகுகளும் கடற் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தன. கன்னியாகுமரி மாவட்ட அணைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1,303 பாசன குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. திருநெல் வேலி மாவட்டத்தில் பெய்த மழை யால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

640 வீடுகள் மூழ்கின

நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளிபாளையம் பகுதி களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள 640 வீடுகள் மூழ்கின. 10 ஏரிகள் நிரம்பின. சேலம் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேகலாம்பட்டி எனுமிடத்தில் மழை காரணமாக ரேஷன் கடையின் சுற்றுச்சுவர் இடிந்தது. அப்போது பொருள்கள் வாங்க வந்திருந்த 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

மரம் விழுந்து பெண் பலி

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. காவேரிப்பாக் கம் செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் என்ப வரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் செல்வம்(40) மற்றும் அவரது மகன்கள் நரேஷ்குமார்(18), தினேஷ்குமார்(14) ஆகியோர் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். ஆற்காடு வாழப்பந்தல் தோணிமேடு கிராமத்தில் புளியமரம் விழுந்ததில், பரிமளா(36) என்பவர் பலியானார். ரவி(55), புஷ்பா(60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் நேற்று 70 மி.மீ., மழை பெய்தது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. 34 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 25 இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

காஞ்சி, திருவள்ளூரில்

கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் கனமழை பாதிப்பை ஏற்படுத்தி யது. காஞ்சிபுரத்தில் மஞ்சள்நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதில் திருக்காலிமேடு பகுதியில் வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தது. பெரும்புதூர், திருக்கழுக்குன் றம் பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாகரல் அருகே மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார். அதேபோல் திருவள் ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந் தது. சுவர்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன. பழவேற்காட்டில் மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. அம்பத்தூரில் 203 மி.மீட்டர் மழை பதிவானது.

புதுச்சேரியில்...

புதுச்சேரியில் நேற்று 14 செ.மீ. மழை பதிவானது. விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதி களிலும், தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக மின்சார மும் துண்டிக்கப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் பலத்த காற்று வீசியதோடு, மழைப்பொழிவும் குறைந்தது. இதனால் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எனினும், நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சூறைக்காற்று டன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மாற்றுச் சாலைகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன. கட லூர் காரைக்காடு என்ற இடத்தில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் காரைக்கால்- பெங்களூர் ரயில், கடலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. தாழ்வான பல கிராமங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புப் பகுதியிலும் தண்ணீர் புகுந்துள்ளது. கடலூரில் 136 மி.மீ. மழையும், சிதம்பரத்தில் 156 மி.மீ, அண்ணாமலைநகரில் 158 மி.மீ. மழை பதிவானது.

கொள்ளிடம் ஆற்றில் வினா டிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.மீட்புப் பணி களில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் 13 குழுக்களை அமைத்துள்ளது.

என்எல்சி மின் உற்பத்தி பாதிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் நேற்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்த தால், 300 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், நெய்வேலியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கனமழை யால் என்எல்சியில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

2 மூதாட்டிகள் உட்பட 3 பேர் பலி

விழுப்புரம் நகரில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பாலு (45) என்ற சமையல் தொழிலாளி உயிரிழந்தார். திருநாவலூர் அருகே குளிர்தாங்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் மழை பாதிப்பு பெருமளவில் இல்லை என்றும், சேந்தநாடு ஏரி நிரம்பியதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி தெரிவித்தார்.

உதகை, குன்னூரில் கடும் பனிமூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருவதால் உதகை, குன்னூரில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மரம் விழுந்ததில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக உதகை, குன்னூர் பகுதிகளில் நேற்று பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கி இருப்பதால், அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் பொ.சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அவசரக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க, பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, தீயணைப்பு, குடிமைப் பொருள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள், மலைப் பாதையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படங்கள்: எம்.சாம்ராஜ், க.ரமேஷ், எஸ்.நீலவண்ணன், விஎம்.மணிநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x