

தென்காசி மாவட்டத்தில் வெப்பத் தின் தாக்கம் அதிகரித்து வருவ தால், தர்பூசணி வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தர்பூசணி பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக மழையின்றி வறண்ட வானிலை காணப்படுகிறது. இரவில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயில் கொடுமையில் இருந்து விடுபட இளநீர், மோர், கூழ், குளிர்பானங்கள், தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றின் வியாபாரம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்கள் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தென்காசியில் தர்பூசணி வியாபாரம் செய்து வரும் லெட்சு மணன் என்பவர் கூறும்போது, “கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் தர்பூசணி பழங்கள் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடுமையான கெடுபிடிகள் இருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்தது. இதனால், விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த தர்பூசணி பழங்கள் விற்பனையாகாமல் அழுகி வீணாகின. பெரும்பாலான வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டி ருந்த தர்பூசணி கொடிகள் சேதமடைந்துவிட்டன. தமிழகத்தில் இருந்து தர்பூசணி வரத்து குறைவாகவே உள்ளது. பெங்களூருவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தர்பூசணியை கொண்டுவந்து சேர்க்க 15 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு ஒரு கிலோ தர்பூசணி 12 முதல் 15 ரூபாய் வரை இருந்தது” என்றார்.