Published : 12 Feb 2021 06:11 PM
Last Updated : 12 Feb 2021 06:11 PM

பந்தலூரில் தந்தை, மகன் உட்பட மூவரைக் கொன்ற யானை 'சங்கர்': வனத்துறையிடம் பிடிபட்டது

மூவரைக் கொன்ற யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, வனத்துறையினர் கயிற்றால் கட்டிப் போட்டனர்.

பந்தலூர்

பந்தலூரில் தந்தை, மகன் உட்பட மூவரைக் கொன்ற 'சங்கர்' என்கிற யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, சேரம்பாடி வனச்சரகத்தில், மூவரைக் கொன்ற இந்த யானையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிடிக்க முற்பட்டபோது, யானை கேரள வனத்துக்குச் சென்றது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி ஒற்றைக் கொம்பன் மீண்டும் சேரம்பாடி வனப்பகுதியில் நடமாடியது. எனவே, மீண்டும் யானையைப் பிடிக்கும் பணி தொடங்கியது.

களத்தில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர்

கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாரன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் சேரம்பாடி வனப்பகுதியில் முகாமிட்டனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அரசு, விருதுநகர் வனக்கோட்டம் பறக்கும் படையைச் சேர்ந்த வனச்சரகர் முருகவேல், வனவர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கூடலூர் வன அலுவலர் குருசாமி தபேலா மேற்பார்வையில், வனத்துறையினர் 40 பேர், யானையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சுஜய், சீனிவாசன் கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் 11 பேர் அடங்கிய சிறப்புக் குழு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது.

மயக்க ஊசி செலுத்தியும் தப்பியது

கடந்த, எட்டு நாட்களாக யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், நேற்று (பிப். 11) கால்நடை மருத்துவர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தினார். யானையைப் பிடித்து முதுமலைக்குக் கொண்டு செல்ல இருந்த நிலையில், குத்திய ஊசியுடன், யானை காட்டுக்குள் ஓடி தப்பியது.

அந்த யானையை சில யானைகள் தனியாக விடாமல், ஆரத்தழுவி, பாசத்தை வெளிப்படுத்தி அரண் போல் நின்றன. இதனால் வனக்குழுவினரால் யானையை நெருங்க முடியவில்லை. இதனால் யானை மீண்டும் கேரள வனப்பகுதிக்குச் சென்றுவிடுமோ என மக்கள் எண்ணினர்.

கடும் போராட்டத்துக்குப் பின்னர் பிடிபட்டது

இந்நிலையில், இன்று மதியம் வனத்துறையினர் கூட்டத்தில் இருந்து ஒற்றை யானையைத் தனியாகப் பிரித்து மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர், யானையை கும்கிகள் உதவியுடன் கயிற்றால் கட்டினர்.

வனத்துறையினர் கூறும்போது, "இந்த யானை அடுத்து யாரையேனும் தாக்கிவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும். இந்த யானை விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துவதில்லை. மனிதர்களைத் தாக்கும். அதற்காகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

எனவே, கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அபாயரணயம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கராலில் அடைக்கப்படும். அங்கு பழக்கப்படுத்தப்பட்டு, வளர்ப்பு யானையாக மாற்றப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x