Published : 12 Feb 2021 05:50 PM
Last Updated : 12 Feb 2021 05:50 PM

மத்திய அரசிடம் தவறு இருந்தால் தட்டிக் கேட்போம்: உடுமலையில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திருப்பூர்

தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று 13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகதான் அடிமையாக இருந்தது. பாஜக அரசிடம் அதிமுக அடிமையாக இல்லை. எதைத் தட்டிக் கேட்போமோ, அதைத் தட்டிக் கேட்போம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“திமுக தலைவர் ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார். அதிமுக ஆட்சியிலே எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்ற பொய்யான பிரச்சாரத்தைத் தொடர்ந்து கூறிவருகிறார்.

அதேபோல கனிமொழி பேசும் அனைத்தும் பொய். வாயிலிருந்து வரும் அனைத்தும் பொய். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அதிமுக ஆட்சியிலே எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்ற பொய்யான பிரச்சாரத்தைக் கூறிவருகின்றார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் குடிமராமத்து திட்டத்தைப் பற்றிப் பேசி இருக்கின்றார். இந்தத் திட்டம் ஏட்டளவில்தான் இருக்கிறது என்று கனிமொழி பேசியுள்ளார். அவர் தெரிந்து பேசினாரா, தெரியாமல் பேசினாரா?. ஏனென்றால் அவருக்கு விவசாயத்தைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சென்னை மாநகரத்தில் வசிக்கக் கூடியவர். திருப்பூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். வேளாண் பணிகள் நிறைந்த மாவட்டம்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையினரால் 6,211 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 1,418 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். பொதுப்பணித் துறையின் மூலம் 14,000 ஏரிகள், உள்ளாட்சி அமைப்புகள், 26,000 குளம், குட்டை ஏரிகளில் 28,623 குளம், குட்டை ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.422 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வளவு திட்டத்தையும் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் சென்ற இடமெல்லாம் தவறான செய்தியைப் பரப்பிவருகிறீர்கள். நான் சொன்ன புள்ளிவிவரம்தான் சரி என்பதை திட்டவட்டமாக இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசு விவசாயிகளின் அரசு. ஒரு விவசாயி முதலமைச்சராக இருக்கின்ற அரசு. விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். ஏனென்றால் வேளாண் பணி சிறந்தால்தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும். உணவு உற்பத்தில் அதிகரித்தால்தான் உணவுப் பஞ்சம் இல்லாமல் நாடு செழிப்பாக இருக்கும்.

கனிமொழி கூறிகிறார், மத்தியில் பாரதிய ஜனதா ஆளுகின்றது. பாரதிய ஜனதா அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டைப் பரப்பி வருகின்றார். திருப்பூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலே, நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, அந்தக் கோரிக்கையின் பேரில், மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை அமைத்துக் கொடுத்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் கனிமொழி.

13 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள், எவ்வளவு நிதி பெற்றுத் தந்தீர்கள், எதுவும் செய்யவில்லை. ஆனால், அதிமுக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றுத் தருகின்றோம்.

குடிநீர் பிரச்சினை, சாலைப் பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறித்தான், நாங்கள் நிறைவேற்றினோமாம், எப்படிப் பாருங்கள்? ஏற்கெனவே இந்தத் திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 5.25 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இதெல்லாம் அந்த அம்மையாருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திமுக ஒரு கட்சி கிடையாது. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு ஸ்டாலின் சேர்மன், அவரது குடும்ப உறுப்பினர்களான உதயநிதி, கனிமொழி, தயாநிதி ஆகியோர் போர்ட் ஆப் டைரக்டர்கள்.

இங்குள்ள விவசாயிகள் பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் இனி 24 மணி நேரமும் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் வைக்கின்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு, அதிமுக அரசு அடிமையாக இருக்கின்றது எனக் கூறிவருகின்றார், அது தவறு. 13 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்தது திமுக. நீங்கள்தான் அடிமையாக இருந்தீர்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று நீங்கள்தான் அடிமையாக இருந்தீர்களே தவிர நாங்கள் இல்லை. எதைத் தட்டிக் கேட்போமோ, அதைத் தட்டிக் கேட்போம்.

மத்திய அரசால் தமிழ்நாட்டு மக்கள் பயனடையக் கூடிய திட்டம் வந்தால் ஆதரவளிக்கும் கட்சி அதிமுக. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய திட்டங்கள் வந்தால் அதை எதிர்க்கக்கூடிய கட்சியும் அதிமுகதான்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x