Published : 12 Feb 2021 05:33 PM
Last Updated : 12 Feb 2021 05:33 PM

உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குத் தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் கூற முடியுமா? - ஆ.ராசா சவால்

ஆர்ப்பாட்டத்தில் பேசும் ஆ.ராசா.

உதகை

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தான் விசாரணைக்குத் தயார் என்று கூற முடியுமா? சிபிசிஐடி அறிக்கையைத் தர முடியுமா? என, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமைகளை அதிமுக அரசு பறிப்பதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் துணைபோவதாகவும் கூறி, திமுக சார்பில் உதகையில் இன்று (பிப். 12) மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தலைமை வகித்தார்.

நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:

"1986-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டுவந்து பேசும்போது உள்ளாட்சி அமைப்புகள் 'குட்டி குடியரசுகள்' ஆக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். அதில், தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. அதனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக மாவட்ட நிர்வாகம் செயல்படக் கூடாது. நீலகிரி ஆட்சியர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி துடைப்பத்தில் ஊழல் செய்தவர். திமுக ஆட்சியில் இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிபதியே, ஏன் ஜெயலலிதாவைக் கைது செய்யவில்லை என்று கேள்வி கேட்டதால்தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்திக்கு டெண்டர் ஒதுக்கினார். இதை எதிர்த்து, திமுக வழக்குப் போட்டபோது , அவர் எனக்கு உறவினர் இல்லை, எனது மகனுக்குதான் மாமனார் என்று வாதிட்டார். மோடியின் காலைப் பிடித்து, இப்போது உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்குத் தொடுத்தபோது, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு, எஸ்.பி.வேலுமணி மீது எந்த ஊழலும் நிரூபணமாகவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை நாங்கள் கேட்டோம். ஒரு வருடம் ஆகியும் அறிக்கை தரவில்லை. உண்மையிலேயே வேலுமணிக்கு தைரியம் இருந்தால் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று நான் விசாரணைக்குத் தயார் எனக் கூற முடியுமா? சிபிசிஐடி அறிக்கையை அளிக்கத் தயாரா?

நீலகிரி மாவட்டம் திமுகவின் கோட்டை. உள்ளாட்சித் தேர்தலில் 95 சதவீதப் பதவிகளை திமுகவினர் வென்றுள்ளனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை வஞ்சிக்கும் விதமாக அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமைகளைப் பறித்து, தன்னிச்சையாக, பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

டெண்டர்களை ரத்து செய்து, ஊராட்சித் தலைவர்கள் ஒப்புதலுடன் மீண்டும் பணிகளுக்கு டெண்டர்களை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிடுவோம்".

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் க.ராமச்சந்திரன், கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, 200 பெண்கள் உட்பட திமுகவினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x