தி.மலை மாவட்ட திமுக துணைச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்; எ.வ.வேலுவுக்கு எதிராக ஆடியோ வெளியான நிலையில் நடவடிக்கை  

சாவல்பூண்டி சுந்தரேசன்.
சாவல்பூண்டி சுந்தரேசன்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு எதிராக குற்றம் சாட்டி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியானது. அதில், எ.வ.வேலு, தனது மகன் கம்பனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், 6,000 ஏக்கர் சொத்து குவித்து இருப்பதாகவும், கரூரில் ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதில், மிக முக்கியமாக திமுக தலைமையில் உள்ள வாரிசு அரசியலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. எ.வ.வேலு மீது குற்றம் சாட்டியது சாவல்பூண்டி சுந்தரேசன் என்று திமுகவினர் கூறி வந்தனர்.

இந்த ஆடியோவால் அதிர்ச்சி அடைந்த எ.வ.வேலு, அடுத்த சில நாட்களில் தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், தனக்கு 6,000 ஏக்கர் நிலம் இல்லை மற்றும் ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர், தன் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் கருத்து தெரிவித்தார். அதே நேரத்தில், அவர், தன்னைக் குற்றம் சாட்டியவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசனைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in