புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உண்டு: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி

சுனில் அரோரா | படம்: எம்.சாம்ராஜ்.
சுனில் அரோரா | படம்: எம்.சாம்ராஜ்.
Updated on
1 min read

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்களிக்கும் உரிமை உண்டு. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன. அதே நேரத்தில், 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கிறது. அவர்களுக்கு வாக்குரிமை உள்ளதால் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆய்வுக்காக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (பிப். 12) இரு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, நியமன எம்எல்ஏக்கள் வாக்குரிமை தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.

இந்நிலையில், சுனில் அரோரா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அரசியலமைப்புச் சட்டம் 239ஏ (1)-ன்படி புதுச்சேரி சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்வான 30 எம்எல்ஏக்கள் தவிர மத்திய அரசு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது, வாக்களிப்பது போன்ற விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க உரிமை உள்ளது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தேர்தல் முடிந்து தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை தந்தால் ஒரு கட்சிக்குச் சாதகமாக இருக்காதா?

நியமன எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத்தான் மீண்டும் நாடி முறையிட முடியும்.

இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளதே?

தேர்தலில் பங்கேற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் ஜனநாயகக் கடமை. தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் பணி.

இவ்வாறு சுனில் அரோரா பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in