அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடுக: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு முதல்வருக்கு வேண்டுகோள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை இன்று (பிப். 12) வெளியிட்ட அறிக்கை:

"1) தமிழக அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி (நாளை) முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. அப்போது இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

2) கரோனா தொற்று உலகையே உலுக்கியதோடு, வளர்ந்த நாடுகளே திணறி வருகின்றன. அதேநேரத்தில், தமிழகத்தில் முதல்வரின் வழிகாட்டுதலில் கரோனா பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தி உள்ளோம்.

3) இருப்பினும் கரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து பணி செய்து வரும் மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

4) கர்நாடகாவில் கரோனா தடுப்புப் பணிகளில் அரசு மருத்துவர்களின் சேவையை பாராட்டி, மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கும் முன்னரே ஊதியக் கோரிக்கையை அம்மாநில அரசு நிறைவேற்றியது.

5) பெருந்தொற்றின் போது மருத்துவர்களின் சேவையை பாராட்டுவதோடு, அரசு மருத்துவர்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்துவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்தது.

6) சுகாதாரத் துறைச் செயல்பாடுகளில் 25-வது இடத்தில் உள்ள பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியமே தரப்படுகிறது.

7) மற்ற மாநிலங்களில் எல்லாம் அரசு மருத்துவர்களுக்கு அரசு தாமாகவே உரிய ஊதியத்தை தருகிறது. ஆனால், தமிழகத்திலோ இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும், அதுவும் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும், அரசு நம் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாதது வேதனையளிக்கிறது.

8) தமிழகத்தில் மற்ற துறையினருக்கு எல்லாம் அவ்வப்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அரசின் சரித்திர சாதனைக்கு அரசு மருத்துவர்கள் உறுதுணையாக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பங்களிப்பை வழங்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படவில்லை.

9) அதுவும் 2009-ல் நிதித்துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணை 354-ல் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்பட வழிவகை செய்யப்பட்டும் அந்த பலன்கள் நமக்கு தரப்படவில்லை. அதுவும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு வருடத்திற்கு 250 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுவதால் இதை நிறைவேற்றுவது எளிதானதே.

10) கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ஒரு மாத சிறப்பு ஊதியம் என அரசே அறிவித்த நிவாரணம் எதுவுமே கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

11) தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கரோனா உயிரிழப்பைக் குறைத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியதால் தான் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடியதோடு, ஜல்லிக்கட்டு போட்டியையும் உற்சாகமாக நடத்த முடிந்தது என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும்.

12) சமீபத்தில் விவசாயிகள், மருத்துவ மாணவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இந்த நேரத்தில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் என முதல்வரால் பாராட்டப்பட்டுள்ள அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

13) எனவே, நடக்க இருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in