

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 61 செல்போன்களை போலீஸார் மீட்டனர். இந்த செல்போன்களை இன்று உரிமையாளர்களிடம் எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் நேரில் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி செல்போன்களை கண்டுபிடித்து மீட்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார்கள் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், தலைமை காவலர் சுப்புராஜ், காவலர்கள் பேச்சிமுத்து, திலிப், எடிசன், புவனேஷ் மற்றும் வசந்தபெருமாள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 102 செல்போன்கள் கடந்த 15.10.2020 அன்றும், 60 செல்போன்கள் கடந்த 09.12.2020 அன்றும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன் பிறகும் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில் தற்போது ரூ.6 லட்சம் மதிப்பிலான மேலும் 61 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை நேரில் ஒப்படைத்தார்.
அப்போது எஸ்.பி பேசியதாவது: செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள்.
கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒருவேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும்.
இருசக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஹெல்மெட் அணியாமல் தலையில் அடிபட்டு இறந்தவர்கள்தான் அதிகம்.
ஆகவே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவேண்டும்.
சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றார் எஸ்பி. நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி கோபி, தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.