Published : 12 Feb 2021 01:27 PM
Last Updated : 12 Feb 2021 01:27 PM

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமித்திடுக: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் சு.வெங்கடேசன் நேரில் வலியுறுத்தல்

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டும் என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, இன்று (பிப். 12) சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:

"பணி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரத்யேகமாக முன்னெடுக்கவும், தீர்க்கவும் லேபர் கோர்ட்டுகள் அல்லது மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயங்கள் (Central Government Industrial Tribunal) அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அப்படி சென்னையில் சாஸ்திரி பவனில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது, பழி வாங்கும் விதமாக தொழிலாளர்களை தண்டிப்பது, தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய சலுகைகளை மறுப்பது, கூட்டு பேர உரிமையை மறுப்பது என தொழில் தகராறு சட்டத்தின்படி எழும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசாரித்து தீர்ப்புகள் வழங்குவதற்கு மொத்த தமிழ்நாட்டுக்கும் அது ஒரு இடம் தான். அணி திரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தாவாக்களை (Disputes) தீர்ப்பதற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் இடம் அது ஒன்று மட்டும்தான்.

எந்தவொரு தொழில் தாவாவும் (Industrial Dispute) மூன்று மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், 2003-ம் ஆண்டில் இருந்து தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தாவாக்களையும் கொண்டதாக சென்னை தீர்ப்பாயம் இருக்கிறது.

இந்த ஆக்கத்தில், வருங்கால வைப்பு நிதி (Provident Fund) குறித்த தாவாக்களையும் இந்த தீர்ப்பாயத்தோடு இணைத்து 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது மத்திய அரசு.

கொடுமை என்னவென்றால் 2017-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. 2018-ம் ஆண்டில் ஒடிசாவைச் சேர்ந்த திப்தி மல்ஹோத்ரா நீதிபதியாக நியமிக்கப்படார்.

ஆனாலும் தாவாக்கள் முறையாகவும், முழுமையாகவும் நடத்தப்படவே இல்லை. வழக்குகள் எல்லாம் மேலும் தேங்கின. கரோனா வந்த பிறகு எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களை வைத்துத்தான் வழக்கு நடத்த வேண்டுமென்றில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களே தங்களுக்காக வழக்கு நடத்தலாம். அல்லது தொழிற்சங்கத் தலைவர்களே வழக்கு நடத்தலாம்.

அப்படியானால் தீர்ப்பாயத்தில் புழங்கும் மொழி அந்தந்த மாநிலத்தின் மொழியாக இருக்க வேண்டியது அவசியம். வேறு மாநிலத்து நீதிபதிகளை நியமித்தால் எப்படி எளிய, சாதாரண தொழிலாளர்கள் தங்களுக்காக வாதிட முடியும். அதனால் முன்னெடுக்க முடியாத, சரியான தீர்ப்பு கிடைக்காத தீர்ப்புகளும் இருக்கின்றன.

உடனடியாக தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை, சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டியதும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தி தீர்க்க வேண்டியதும் அவசியம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளேன். சென்னை தீர்ப்பாயத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்".

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x