கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை குறைந்ததால் கடும் குளிர்  

கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூரில் அதிக பனிப்பொழிவால், பச்சை நிற புற்கள் வெண்மையாக காட்சியளிக்கின்றன. 
கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூரில் அதிக பனிப்பொழிவால், பச்சை நிற புற்கள் வெண்மையாக காட்சியளிக்கின்றன. 
Updated on
1 min read

கொடைக்கானல் மலைப்பகுதியில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து 6 டிகிரி செல்சியசாக உள்ளது. இதனால் இரவில் கடும் குளிர் உணரப்படுகிறது. பச்சைப் புற்கள் மீது பனி படிந்துள்ளதால் வெண்மை நிறமாகக் காட்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதொறும் டிசம்பர் கடைசி வாரம் ஜனவரி தொடக்கம் என மார்கழி மாதத்தில் உறைபனி காணப்படும்.

இந்த ஆண்டு வழக்கமான பனிகாலத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் குளிர் காலம் தாமதமாகத் தொடங்கியது. ஜனவரி இறுதிவரை மழை பெய்துவந்தநிலையில் மழை முடிந்தவுடன், கொடைக்கானலில் பனியின் தாக்கம் தொடங்கியது.

பிப்ரவரி முதல்வாரத்தில் உறைபனி காணப்பட்ட நிலையில் பின்னர் கடந்த ஒருவாரமாக குளிரே காணப்பட்டது. ஆனால் கடந்த இருதினங்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து உறைபனி மீண்டும் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளில் அதிகபட்சமாக பகலில் 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவுகிறது.

இதனால் இரவில் கடும் குளிர் உணரப்பட்டது. வழக்கமாக பிப்ரவரி மாதங்களில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பனியின் தாக்கம் படிப்படியாக குறையத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பனியின் தாக்கம் தொடர்கிறது.

இதனால் கொடைக்கானல் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் காலையில் வெகுநேரம் கழித்தே எழுந்திருக்கும்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மலைப்பகுதியில் காலையில் கடைகளும் தாமதமாகவே திறக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பலர் குளிரை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் கொடைக்கானலில் தங்கும் முடிவை கைவிட்டு ஒரு நாள் சுற்றுலாவாக மாற்றிக்கொண்டு திரும்புகின்றனர்.

இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை வாரவிடுமுறை நாட்களிலும் குறைந்தே காணப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in