

முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுபற்றி இடைக்கால அறிக்கை தர தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இக்கணக்குகளை இந்திய கணக்குத்தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உடல் நிலை சரியில்லாத 62 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ. 3.10 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (பிப். 12) காலை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு அதுபற்றி தெரிவித்துள்ள தகவல்:
"புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 62 பேருக்கு உடல்நிலை சரியில்லை எனக் குறிப்பிட்டு நிதி உதவி தரப்பட்டுள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுகிறது. அதனால் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி இதை உடனடியாக ஆராய வேண்டும்.
தலைமைச் செயலாளர் உடனடியாக இந்திய கணக்குத் தணிக்கைத்துறையை தொடர்பு கொண்டு இக்கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். மேலும், வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.
நிவாரண நிதியை மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் பயன்படுத்த வேண்டும். தலைமைச்செயலாளர் இதுபற்றி இடைக்கால அறிக்கையை இரு வாரத்துக்குள் தாக்கல் செய்யக் கோரியுள்ளேன்.
முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கல்கள் கடைசியாக எப்போது தணிக்கை செய்யப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அதனால் இந்திய கணக்கு தணிக்கைத் துறையை தணிக்கை செய்யக் கோருகிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.