'ஊற்றிக் கொடுத்தார் தினகரன்' - சி.வி.சண்முகம் | 'வாழ்க வசவாளர்கள்' -டிடிவி தினகரன்: சூடுபிடிக்கும் மோதல்

'ஊற்றிக் கொடுத்தார் தினகரன்' - சி.வி.சண்முகம் | 'வாழ்க வசவாளர்கள்' -டிடிவி தினகரன்: சூடுபிடிக்கும் மோதல்
Updated on
2 min read

சசிகலா வருகையை ஒட்டி அதிமுக, அமமுக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் - டிடிவி தினகரன் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இருவரும் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்வது அதிகரித்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை அதிமுக அமைச்சர்களிடையே பல்வேறு விதமான வெளிப்பாடுகளைப் பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றோர்கள் கடுமையாகவும், சில அமைச்சர்கள் மென்மையாகவும், ஓபிஎஸ் போன்றோர் மவுனமாகவும், சில அமைச்சர்கள் பட்டும் படாமலும், சில அமைச்சர்கள் கையெடுத்துக் கும்பிட்டு விலகி ஓடும் காட்சியையும் காண முடிகிறது.

அதிமுகவில் சசிகலா வருகை குறித்த ஒருமித்த கருத்தைக் காண முடியவில்லை. எப்போதும் சிரித்தபடி அரசு விழாவிலும் அரசியல் பேசும் அமைச்சர் செல்லூர் ராஜு, சசிகலா குறித்த கேள்விக்குக் கோபப்பட்டு, இது அரசு விழா. இங்கு அரசியல் பேசக்கூடாது என்று கோபமாக எச்சரித்ததை முதன்முறையாகச் செய்தியாளர்கள் கண்டனர்.

இதேபோன்று முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விமர்சிக்க மாட்டேன். எங்கள் கட்சியிலிருந்து 18 எம்.எல்.ஏக்களைக் கொண்டு சென்றவர். ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தவர் டிடிவி தினகரனைத்தான் விமர்சிப்பேன் என்று கூறினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், தினகரனிடமிருந்துதான் சசிகலாவைக் காப்பாற்ற வேண்டும். அவரிடமிருந்து விலகியிருங்கள் என சசிகலாவை எச்சரித்தார். மிக ஆவேசமாக அவர் டிடிவி தினகரனை விமர்சிக்க, வாழ்க வசவாளர்கள் என அதற்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். இருவருக்கும் இடையேயான மோதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

''சசிகலா அதிமுகவைக் கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டிடிவி தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால், அவர் 4 மாதத்தில் அதை உடைத்துவிட்டார்.

இன்னொன்றையும் அவர் அடிக்கடி கூட்டங்களில் சொல்கிறார். நான் நிதானமாகப் பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம். இவர்தான் எனக்கு 'ஊற்றிக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊற்றிக்' கொடுப்பதுதான். கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊற்றிக் கொடுத்தார்.

இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது''.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார்.

இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், வாழ்க வசவாளர்கள் என அண்ணா பாணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நிதானமிழந்து தன்னிலை மறந்து சி.வி.சண்முகம் பேசுகிறார் என்று தினகரன் பதிலளித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து.

மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக் கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in